இந்திய மீனவர்களின் அத்துமீறலால்; 10 நாட்களில் பல கோடி ரூபா இழப்பு

வடக்கு கடல் பரப்பில் கடந்த 10 தினங்களாகப் பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால், எமது மீனவர்களுக்குப் பல கோடி ரூபாய் பெறுமதியான இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளுக்குப் பொறுப்புக்கூறுவது யார்? என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம். ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
“வடக்கில், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது. இந்திய மீனவர்களின் வருகை தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாகப் பேசி வந்தாலும், கடந்த 10 தினங்களுக்குள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.
இந்திய மீனவர்கள் என்று குறிப்பிடும்போது, தமிழக மீனவர்கள் மாத்திரமின்றி, தற்போது பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்களும் எங்களது கடல் வளத்தை நோக்கி வருகை தந்து அதனைச் சூறையாடுவதுடன், இங்குள்ள மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களை நாசமாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
அண்மையில் ஒரு மீனவர் தனது ஆதங்கத்தை ஒலிக்காட்சியாக வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிகழ்வுகள் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவைப் பாழடித்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம்.
அண்மையில் நடந்த சம்பவங்களில் , மன்னார் மாவட்டம் தலைமன்னாரிலிருந்து தொழிலுக்குச் சென்ற 65 மீனவர்களில் 30 பேரின் வலைகள் அறுக்கப்பட்டுத் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு படகிற்கு 5 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கப்பால், வங்காலைப்பாடு, கட்டாஸ்பத்திரி மற்றும் பேசாலை மீனவ சங்கத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனை எங்களால் தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
கடற்படையினரும் கண்மூடித்தனமாகவே இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனோதானோவென்று ஏதேனும் ஒரு படகைக் கைது செய்தால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. எங்களது கடல் எல்லையை முழுமையாகப் பாதுகாக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை கடந்த 10 நாட்களுக்குள் பல கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன.
இதற்கப்பால், முல்லைத்தீவில் இறால் பிடி சீசன் தொடங்கியுள்ள நிலையில், இப்போதே இந்திய மற்றும் காரைக்கால் மீனவர்கள் அங்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட படகுகளைத் தாங்கள் கண்டதாக அங்குள்ள மீனவ சமூகம் எமது கவனத்திற்குொண்டு வந்துள்ளது.
எனவே, இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியதையும், இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தையும் ஆலோசனையையும் முன்வைத்ததையும் தாண்டி, அவற்றை மதிக்காத வகையிலேயே காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் நினைத்தவாறு செயற்பட்டு வருகின்றனர். அங்கு அவர்கள் எவரையும் மதிப்பதில்லை என்றார்.
![]()