ஈரான் போர் அமெரிக்க அரசியலில் தாக்கம் ; தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி சந்தித்த தோல்விக்கு ஈரானுடனான போர் ஓரளவு காரணமாக அமைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
வாஷிங்டனில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர் எட்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்ற நிலையில், அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமை வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வெற்றிவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், ஈரான் போர் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை அவசியமானதாக அமைந்ததாகவும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியினர் முன்வைக்கும் திட்டங்களை ஜனாதிபதிக்குரிய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.
இதனால் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்படக்கூடும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளும் அனைத்துத் திட்டங்களையும் வீட்டோ அதிகாரத்தின் மூலம் நிராகரித்துக்கொண்டிருக்கத் தான் விரும்பவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து சில விடயங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதையும் அவர் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()