உலகம்

நிக்கி மினாஜின் அழகு குறித்து டிரம்ப் கருத்து ; மேடையிலேயே மன்னிப்புக் கோரியதால் சர்ச்சை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரபல ராப் பாடகி நிக்கி மினாஜின் தோற்றம் குறித்து அரசியல் மேடையில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி மிச்சிகனில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டத்தில் நிக்கி மினாஜ், டொனால்ட் டிரம்புடன் ஒரே மேடையில் தோன்றி, குடியரசுக் கட்சிக்கும் அதன் வேட்பாளர்களான ஜான் ஜேம்ஸ் மற்றும் மைக் ரோஜர்ஸ் ஆகியோருக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய டிரம்ப், நிக்கி மினாஜின் அழகு குறித்து தனிப்பட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னர், தான் பேச வேண்டிய முக்கிய விடயத்திலிருந்து விலகிவிட்டதை உணர்ந்த அவர், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், நிக்கி மினாஜின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் மேடையிலேயே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நிக்கி மினாஜைப் பாராட்டிய டிரம்ப், அவர் அழகானவர், சிறப்பானவர் மற்றும் புத்திசாலி என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங், நிக்கி மினாஜ் அடுத்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளராக வரக்கூடும் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் கருத்து எந்தவொரு அதிகாரப்பூர்வ நியமன அறிவிப்பையும் குறிக்கவில்லை. அமெரிக்க அரசியலில் பிரபலங்கள் தங்களது அரசியல் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், டிரம்பின் தனிப்பட்ட கருத்து கூட்டத்தின் அரசியல் நோக்கத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நிக்கி மினாஜின் அரசியல் ஆதரவு, டிரம்பின் கருத்து மற்றும் அதைத் தொடர்ந்து அவர் தெரிவித்த மன்னிப்புக் கோரல் ஆகியவை தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளன

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *