அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தியில் இரு இந்து ஆலயங்களையும் புனரமைக்க விடக் கூடாது!; அது சிங்கள பௌத்தர்களுக்கு பிரச்சினையாகும் என்கிறார் தயாசிறி

அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தியின் போது அங்குள்ள இரண்டு இந்து ஆலயங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுவதாகவும், இது தொடர்பில் அட்டமாஸ்தானங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்தேகம் வெளியிடுவதுடன், இவ்வாறு நடந்தால் சிங்கள பௌத்தர்களுக்கு இது பிரச்சினையாகும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை அநுராரபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக இந்தியாவினால் 700 கோடி ரூபா நிதி வழங்கப்படும் நிலையில், அந்த நிதி குறிப்பிட்ட இரண்டு ஆலயங்களின் நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்படுமா? என்பதனை அரசாங்கம் கூற வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
தனது அலுவலகத்தில் தயாசிறி ஜயசேகரவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்டம் மற்றும் அபிவிருத்தியின் போது பின்பற்ற வேண்டிய முறைமைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் தற்போதுள்ள 28 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பை 38 சதுரக் கிலோ மீட்டர் வரையில் விருத்தி செய்வது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய வலயம், கவனம் செலுத்தப்பட வேண்டிய வலயம் மற்றும் பொது வசதிகள் வலயம் என்று மூன்று வலயங்களாக அதனை பிரிவிக்கவுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக அதிக கவனம் செலுத்த வேண்டிய வலயத்தில் புதிய வழிபாட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக அங்குள்ள இந்து ஆலயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டு பழைய இந்து ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றின் சிதைவுகளே உள்ளன. அவற்றில் பூஜைகள் நடக்கின்றன. இந்நிலையில் அநுராரபுரம் புனித பூமி அபிவிருத்திக்காக இந்தியாவினால் 700 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அறியக் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் இந்தியாவில் இருந்து இந்து மதகுருவொருவர் வருகைத் தந்தார். அவரை வெளிவிவகார அமைச்சர் வரவேற்றார். அவரை நாட்டில் பல பகுதிகளுக்கும் பாதகாப்புடன் அழைத்துச் சென்றனர். இராமர் ஆலயங்கள் தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே அவரை இவ்வாறு அழைத்துச் சென்றனர். இவ்வாறான நிலைமையில் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ள 700 கோடி ரூபாவை அநுராதபுரத்தில் சிதைவுகளாக இருக்கும் இந்து ஆலயங்களை புனரமைக்க பயன்படுத்துவீர்களா? என்று நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்.
அதாவது இது தொடர்பில் பெரும் பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது. அட்டமாஸ்தானங்களின் மகாநாயக்க தேரர்களை நாங்கள் சந்தித்தோம். இந்த நிதியை பயன்படுத்தி அங்கு இரண்டு கோயில்களை நிர்மாணிக்கப் போகின்றனரா? என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது சிங்கள பௌத்தர்களுக்கு பெரும் பிரச்சினையாகும். நாங்கள் ஒருபோதும் வேறு மதங்களை தாக்கும் இனவாதத்தை நிராகரிக்கின்றோம்.
அத்துடன் வடக்கு, கிழக்கில் பெருமளவில் எமது தொல்லியல் சின்னங்கள் உள்ளன. அவற்றை வர்த்தமானியில் அறிவிக்கவும் தாமதிக்கின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட வெளியாகியுள்ள வர்த்தமானிக்கு அமைய இராமர் ஆலயத்தை அமைக்கும் முயற்சிகள் உள்ளனவா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அத்துடன் சங்கமித்தா மாவத்தை மற்றும் அனுலா மாவத்தை ஆகிய பகுதிகளில் வசிப்போரை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெஹர விகாரை தவிர வீதியோர புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கும் வேலைத்திட்டம் இருக்கின்றதா? என்றும் கேட்கின்றோம் என்றார்.
![]()