திலீபனுக்கு சிலை வைப்பு : கஜேந்திரனிடம் சி.ஐ.டி. 3 மணி நேர விசாரணை

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் புதிதாக உருவச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகச் செல்வராசா கஜேந்திரனை நேற்று முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுக் காரியாலயத்துக்குச் சமூகமளிக்குமாறு நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் மணற்தரை வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள செல்வராசா கஜேந்திரனின் இல்லத்தில் வைத்துக் கஜேந்திரனின் துணைவியாரிடம் இதற்கான அழைப்புக் கட்டளை நேரடியாக வழங்கப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம் நேற்று முற்பகல்-10 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுக் காரியாலயத்தில் செல்வராசா கஜேந்திரன் விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தார். இதன்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரச் செயலாளரும், கட்சியின் சட்ட ஆலோசகருமான நடராஜர் காண்டீபனும் உடன் சென்றிருந்தார்.
யாழ்.மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எஸ்.பிறேமதிலக முன்னிலையில் முற்பகல்-10 மணியளவில் ஆரம்பமாகிய வாக்குமூலம் பெறும் நடவடிக்கை பிற்பகல்-01 மணி வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது நல்லூரில் திலீபனின் உருவச் சிலை புதிதாக வைக்கப்பட்டமை தொடர்பாகவும், திலீபன் தொடர்பிலும், அவருக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாகவும் செல்வராசா கஜேந்திரனிடம் துருவித் துருவி விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒரு சட்டவிரோதமான நிகழ்வாக, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதொரு நிகழ்வாகக் காட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்காலத்தில் வடக்கு- கிழக்கில் தடை செய்வதற்கான நேரடி அச்சுறுத்தல் முயற்சியே குறித்த விசாரணை நடவடிக்கை எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். விசாரணைகள் நிறைவுபெற்றதும் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .
தமிழ்மக்களின் நினைவேந்தல் உரிமை விடயத்தில் அநுரகுமார தலைமையிலான அரசு இரட்டை வேடம் போடுகின்றது. நினைவேந்தல் உரிமை தமிழ்மக்களின் அடிப்படை உரிமை. எத்தகைய அச்சுறுத்தல்கள், தடைகள் வந்தாலும் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காகவும், இழந்த தமிழ்மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் நாங்கள் தொடர்ந்தும் உறுதியாகப் பயணிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
இதேவேளை, நல்லூரில் திலீபனின் உருவச் சிலை புதிதாக வைக்கப்பட்டமை தொடர்பாக அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி.மதிவதனி விவேகானந்தராசாவிடம் யாழ்.
மாவட்டக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()