2028 இல் மீண்டும் கடன் பற்றாக்குறை ஏற்படும்; சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

அரசாங்கம் தற்கொலைத் தனமான பெரிய முடிவுகளை எடுக்காதவரை 2022ஆம் ஆண்டைப் போன்ற உடனடிப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், வரும் 2028ஆம் ஆண்டில் மீண்டும் செலுத்த முடியாத கடன் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
6 பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியிருந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் மத்திய வங்கியிடம் வெறும் 25 மில்லியன் டொலர்களே எஞ்சியிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், 2028இல் 2022 போன்றதொரு நிலைமை வராவிட்டாலும் கடன் நெருக்கடி மீண்டும் தலைதூக்கலாம் என்றார்.
“22க்கு அப்பால் – நாட்டின் பொருளாதாரத்துக்கான தீர்வு என்ன?” எனும் தலைப்பில் கண்டி கெப்பெட்டிபொல மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.2022இல் நாடு திவாலானதற்கு வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாமல் போனதே பிரதான காரணம். அப்போது அரசாங்கம், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை என ஒட்டுமொத்தமாக 55 பில்லியன் டொலர் வரை கடன் இருந்தது. இதில் குறுகிய காலத்தில் அதிக வட்டிக்குப் பெறப்பட்ட கடன்களே பெரும் சுமையாக மாறின.
தற்போது கூறப்படும் 3 முதல் 4 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது பெரிய விடயமல்ல.அரசாங்கம் ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த வளர்ச்சியை எட்ட முடியும்.7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டினால் மட்டுமே அது அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான பணி என ஏற்றுக்கொள்ள முடியும்.
அதிவேக நெடுஞ்சாலைகளுக்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாவிலும் 60 ரூபா டொலர் வடிவிலேயே வெளியேறுகிறது. எனவே, டொலரை விரயம் செய்யும் இத்தகைய திட்டங்களைத் தவிர்த்து, குறுகிய காலத்தில் டொலர் ஈட்டும் வழிகளை நோக்கி நாடு நகர வேண்டும்.
அத்துடன், நிலக்கரி மின் நிலையம் இன்னும் 10 ஆண்டுகளில் மூடப்படவுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் நிலக்கரி மீதான தங்கியிருத்தலைக் குறைத்து, உடனடியாகச் சூரிய சக்தி போன்ற மாற்று வலுசக்தித் திட்டங்களுக்கு மாற வேண்டும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 5 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்புச் சந்தைக்கு வரவுள்ளனர். ஆனால் உள்நாட்டில் போதுமான வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லை. போட்டிப் பரீட்சைகள் மூலம் நாட்டின் மிகத் திறமை வாய்ந்த மனிதவளம் அரச நிர்வாக சேவைக்கு ஈர்க்கப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 70களுக்குப் பிறகு அரச சேவையில் அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளது என்றார்.
![]()