செம்மணி மனிதப் புதைகுழி குறித்த தொல்லியல் பேராசிரியரின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறோம்; நவம்பர் 16 ஆம் திகதி போராட்டம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்பட வேண்டும் என நவம்பர் 16ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அவ்வாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில் செம்மணி மனிதப் புதைகுழியில், 110 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியில் 583 மனித எலும்புக் எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலையில் பேராசிரியர் ராஜ சோமதேவா நீதிமன்றத்திற்கு ஒரு இடைக்கால அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்திருக்கின்றார்.
அந்த அறிக்கையானது எந்தவிதமான ஆய்வுகளோ, மரபணு பரிசோதனைகளோ அல்லது தொல்லியல் தடவியல் சம்பந்தமான எந்தவித ஆய்வுகளோ மேற்கொள்ளாது, அதொரு மனித புதைக்குழி என்றதையும் குறிப்பிடாமல் அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றார்.
நாம் அதை முற்றாக நிராகரிக்கின்றோம். இனப் படுகொலையின் சாட்சியமான பெரும் மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது.
எனவே கடந்த காலங்களில் போன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி, மன்னார் ச.தொ.ச மனித புதைகுழி போன்ற புதைக்குழிகளை இவரே மூடியிருக்கின்றார்.
எனவே புதைகுழி அகழ்வில், சர்வதேசம் தலையிட வேண்டும், சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட வேண்டும், சர்வதேச நீதி கோருவதற்காக சர்வதேசத்தின் தடயவியலாளர்களை இங்கு கொண்டுவரப்பட்டு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு பரிசோதனைகளை ஒரு சர்வதேச கண்காணிப்பின் ஊடாகவே அதனை பாதுகாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறோம்.
அதனை தொடர்ந்து வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மாலை 2 மணிக்கு செம்மணி மனித புதைக்குழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும். சர்வதேச விசாரணை மூலமாகவே எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
இனப்படுகொலையின் பெரிய சாட்சியாகின்ற இந்த மனித புதைகுழிக்கு நாம் சர்வதேச நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒன்று திரண்டு வர வேண்டும் என்பதை இந்த இடத்திலே கூற விரும்புகின்றோம்.
எனவே நாம் தொடர்ச்சியாக இந்த செம்மணி மனித புதைகுழிக்காக சர்வதேச நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ச்சியாக போராடுவோம். எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி நிற்கிறோம் – என்றனர்.
![]()