இலங்கை

இனவாதத்தை தூண்ட துடிக்கும் கூட்டங்களின் ஒரு இரகசிய சந்திப்பு

இலங்கையில் விஹாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் போராட்டம், மத உரிமைகள் தொடர்பான விவகாரமாக மட்டுமன்றி, அரசியல் அதிகாரம், சட்டத்தின் ஆட்சி, பழைய அரசியல் – குற்றவியல் தொடர்புகள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்த விவாதமாகவும் மாறியுள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், அரசாங்கத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

தலைதூக்க துடிக்கும் மதவாத அரசியல்
பலாங்கொடை கஸ்ஸப தேரர் தலைமையிலான போராட்டம், சிறையில் உள்ள பிக்குகள் காவி உடையை அணியும் உரிமை மற்றும் ஞானசார தேரரின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கிறது.

ஆனால், இந்தக் கோரிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலக வேண்டும் அல்லது ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு இது தொடரப்பட்டது.

ஒரு மதத் தலைவரின் விடுதலைக்கான கோரிக்கை எவ்வாறு நாட்டின் ஜனாதிபதியின் பதவி விலகலைக் கோரும் அரசியல் அழுத்தமாக மாறியது என்பது இலங்கையின் அரசியலில் தலைதூக்க துடிக்கும் மதவாத அரசியல் பின்புலத்தை எடுத்துக்காட்டுகிறது.

தோல்வியடைந்த மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பழைய அரசியல்வாதிகளே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் போராட்டத்திற்குப் பின்னால் இருந்து நிதியுதவி செய்து இயக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள சில சாதாரண மக்கள் வறுமையின் காரணமாகவும், பணம் மற்றும் உணவுக்காகவுமே அங்கு அழைத்து வரப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சில சமூக செயற்பாட்டாளர்கள் விவரித்துள்ளனர்.

தூய்மையான பௌத்த மதத்தின் அடையாளமான காவி உடையை (சீவரத்தை) ஒரு போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு, பிக்குகள் என்ற பெயரில் சிலர் அரசியல் சூதாட்டம் ஆடுகிறார்கள்.

பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் ‘வஸ் கவி’ (சாபக் கவிதைகளை) எழுதுவதும், பௌத்த தர்மத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவதும் அசிங்கமானது.

இந்நிலையில்தான் போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த தேரர், உடல்நலக்குறைவு காரணமாக பக்தர்களின் ஏற்பாட்டில் தங்குமிடமும் மருத்துவ உதவியும் பெற்றதாக விளக்கமளித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவும் அதே இடத்தில் இருந்ததாக முன்வைக்கப்படும் தகவல் அரசியல் சந்தேகங்களை எழுப்புகிறது.

அந்த ஹோட்டலில் ஒரோ அரைக்குள் இருவரும் குழுவாக சென்று வந்த சிசிரிவி காட்சிகள் மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. சரத் வீரசேகவை பொருத்தவரையில் ஊடகங்கள் முன் இனவாத வார்த்தைகளால் தனது அரசியல் வாதங்களை விவாதிக்க கூடியவர்.

அப்படியான ஒரு முன்னாள் எம்.பி குற்றத்தண்டனை விதிக்கப்பட்ட, ஒரு தேரருக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துக்கொண்ட கஸ்ஸப்ப தேரரை சந்தித்தமை இனவாதத்தை தூண்ட துடிக்கும் செயலின் கலந்துரையாடல் பின்னணியா என்ற ஊகங்களும் எழுப்பப்படுகிறன்றன.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பௌத்த பிக்குகள் சமூக மாற்றங்கள், தேசிய அரசியல், மொழிக் கொள்கை மற்றும் மத உரிமைகள் போன்ற விவகாரங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தாலும் இனவாதத்தை மதவாதத்தை வெளிப்படுத்தவென்றே சில தரப்பினர் முனைகின்றனர்.

ஜாதிக ஹெல உறுமய, பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் அரசியல் செல்வாக்கும், பௌத்த மதத் தலைவர்கள் தேர்தல் அரசியலிலும் பொதுக் கொள்கைகளிலும் ஏற்படுத்திய தாக்கமும் இன்றைய விவாதத்திற்கு வரலாற்றுப் பின்னணியை வழங்குகின்றன.

எனினும் மதத் தலைவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு நல்லென்னங்களின் அடிப்படையில் உரிமையுடையவர்கள். அதேவேளை, மத அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் அல்லது வன்முறையை நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *