உலகம்

ரியாத் விமான நிலையத்தை தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைப் (King Khalid International Airport) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (25) முதல் விமானப் பயணங்களுக்காக இரண்டு முனையங்கள் (Terminals) ஒதுக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துச் சில மணி நேரங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிங் காலித் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து ஒரு “இராணுவ இலக்காகக்” கருதப்படும் என ஹூதி படையினரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமானப் பயணிகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, கிங் காலித் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் நேற்று (24) வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் முனையம் 1 உள்நாட்டு விமானப் பயணங்களுக்கும், முனையம் 2 தேசிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சர்வதேச விமானப் பயணங்களுக்கும் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததைத் தொடர்ந்து, ஒக்டோபர் 10 ஆம் திகதி விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

இத்தாக்குதலானது ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்தில் சவூதி அரேபியாமீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் (Drone) தாக்குதல்களை நடத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்கள் மூலம் பரந்த பிராந்தியப் போரில் அமெரிக்காவின் நட்பு நாடான சவூதி அரேபியாவுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா சமீபத்தில் தனது இராணுவத் தலையீடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மாதம் செங்கடல் கடலோரப் பகுதியின் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல்களை நடத்தி, யேமன் அரசின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *