பலதும் பத்தும்

ஆஸ்திரேலியாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு

ஆஸ்திரேலியாவின் புதிய விமான நிலையமான மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Western Sydney International – WSI) ஜெட்ஸ்டார் விமான நிறுவனத்தின் முதலாவது பயணிகள் விமானம் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

நான்சி-பேர்ட் வால்டன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பயணிகள் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. ஜெட்ஸ்டாரின் JQ362 என்ற உள்நாட்டு விமானம், கோல்ட் கோஸ்ட் நகரை நோக்கி காலை 11 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பயணத்திற்கு முன்னதாக, ஏர்பஸ் A320 ரக விமானம் சிட்னி விமான நிலையத்திலிருந்து மேற்கு சிட்னி விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனை பிளாக்டவுன் பகுதியைச் சேர்ந்த விமானி ஒருவர் இயக்கியிருந்தார்.

திட்டமிட்ட நேரத்தில் புறப்பட்ட இந்த விமானம், விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் FlightRadar24 தளத்தின்படி, உலகிலேயே அதிகளவில் கண்காணிக்கப்பட்ட விமானமாக மாறியது.

மேற்கு சிட்னி பகுதியைச் சேர்ந்த மக்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விமானம் தங்கள் பகுதிக்கு மேலாகப் பறந்ததைக் காண வானத்தை நோக்கினர்.

புதிய விமான நிலையத்தின் மூலம், சிட்னி நகர மக்களில் பல மில்லியன் பேருக்கு சர்வதேச விமானப் பயணங்களுக்கான வசதி இலகுவாகக் கிடைக்கவுள்ளது.

“பென்ரித் பகுதியிலிருந்து இங்கு வருவதற்கு வெறும் 20 நிமிடங்கள்தான் ஆனது. நாங்கள் அடிக்கடி பயணம் செய்வோம். இனி 20 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைய முடிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என, குறித்த விமானத்தில் பயணித்த குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் திறப்பு விழாவில், மேற்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைமன் ஹிக்கி, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் கேத்தரின் கிங், நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிறிஸ் மின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய விமான நிலையத்தின் திறப்பும் முதலாவது பயணிகள் விமானச் சேவையும் மேற்கு சிட்னி மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என சைமன் ஹிக்கி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *