பிரதமர் மோடி ஒடிசா பயணம்: மணல் சிற்பம் மூலம் வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒடிசா மாநில விஜயத்தை முன்னிட்டு, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் எட்டு அடி உயர மணல் சிற்பமொன்றை உருவாக்கி வரவேற்பளித்துள்ளார்.
ஒடிசாவின் கலாசாரப் பாரம்பரியத்தையும் இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஒடிசாவின் கட்டடக்கலை மற்றும் கலாசார அடையாளமாக விளங்கும் கோணார்க் சக்கரத்துடன், இந்திய மத்திய வங்கியின் (RBI) தரவு மையத்தைப் பிரதிபலிக்கும் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி ஒடிசாவுக்கு வருகை தரவுள்ள நிலையில், அங்கு மத்தியவங்கியின் தரவு மையம் மற்றும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றைத் திறந்து வைக்கவுள்ளார். இதனை முன்னிட்டே இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுதர்சன் பட்நாயக், ஒடிசாவில் ரிசர்வ் வங்கியின் இரண்டாவது தரவு மையம் அமைக்கப்பட்டிருப்பது மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் விடயம் எனக் குறிப்பிட்டார்.
கலை வடிவத்தின் ஊடாகப் பிரதமரை வரவேற்பதுடன், ஒடிசாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
புவனேஸ்வர் அருகிலுள்ள ஜட்னி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தரவு மையம், இந்தியாவின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கும் டிஜிட்டல் நிதிச் சேவைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டை முன்னெடுப்பதிலும் புதிய நிறுவனம் முக்கிய பங்காற்றவுள்ளது.
![]()