ஞானசார தேரருக்கு மீண்டும் மன்னிப்பு! ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை..

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பில் நடைமுறை சார்ந்த தவறுகள் ஏதேனும் இருப்பின், அவற்றைச் சரி செய்து அவருக்கு மீண்டும் முழுமையான மன்னிப்பை வழங்குவதற்கான அனைத்து அதிகாரமும் தற்போதைய ஜனாதிபதிக்கே உள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி, கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மகா சங்கத்தினரின் கோரிக்கை
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

அனைத்து விடயங்களையும் பரிசீலித்தே அவர் அந்த முடிவை எடுத்தார். எனினும், தற்போதைய அரசு அந்த முடிவில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகக் கூறி, அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.
பொதுமன்னிப்பு
பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கலானது ஜனாதிபதி செயலகத்தால் இடம்பெற்ற தொழில்நுட்பத் தவறேயன்றி, மைத்திரிபால சிறிசேனவின் தவறல்ல.
இவ்வாறானதொரு நிர்வாகத் தவறுக்காகப் மன்னிப்புப் பெற்ற நபரைக் குற்றவாளியாக்க முடியாது. ஏனெனில், அந்த நடைமுறையின் மீது அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உட்பட மகா சங்கத்தினரின் கோரிக்கை இன்னமும் மாற்றமின்றி அப்படியே உள்ளது. எனவே, நடைமுறை சார்ந்த தவறுகளை நிவர்த்தி செய்து, ஞானசார தேரருக்கு மீண்டும் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைத் தற்போதைய ஜனாதிபதி வழங்க வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடாகும் என குறிப்பிட்டார்.
![]()