மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செயற்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலகவில்லை

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலகவில்லை. நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு சகல தரப்பின் ஒத்துழைப்பும் அவசியமாகும். திட்டமிட்டதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற செயற்குழுவின் தலைவரும், அமைச்சருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் செயற்குழுவில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவில் எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.எவரும் குழுவில் இருந்து எவரும் விலகவில்லை. சகல தரப்பினரது ஒத்துழைப்புடன் குழு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். குழுவில் சகல விடயங்களும் ஆராயப்படுகின்றன. அவற்றுக்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதை போன்று ஆளும் தரப்பு முன்வைக்கும் யோசனைகள் குறித்தும் ஆராயப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் சகல தரப்பினரது ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஏன் இந்த விடயத்தில் அவசரப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உண்மையில் தீர்வு காணும் நோக்கம் இவர்களுக்கு உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குழுவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
![]()