இறுதி மூச்சுவரை வீரசைவக் குருவாக வாழந்து உயிர் நித்த சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள்.. சின்னத்தம்பி குருபரன்


இறுதி மூச்சுவரை வீரசைவக் குருவாக வாழந்து உயிர் நித்த கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீச்சரர் ஆலயப்
பிரதம குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள்.
வீரசைவம் ஓர் அறிமும்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. நினைவு தெரிந்த காலம் முதல் அர்த்தமுள்ளதாக வாழ்ந்து மடிடிவதே வாழ்க்கையின் வெற்றியாகும். பிறரோடு இணைந்து பிறருக்கு உதவி செய்து, பிறரை வருத்தாது, மனங்கோணாது வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே பேரின்பம். அத்தகைய வாழ்வு வாழ்ந்தவர்களாக ஒரு சிலரையே நாம் காணமுடியும்.
இக்கட்டுரை கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீச்சரர் ஆலயமும் சிவஸ்ரீ சோதிலிங்கம் குருக்களும், இருக்கு வேதத்தில் சிவலிங்கம் பற்றிய கருத்துக்கள், வீரசைவம் (இலிங்காயத் நெறி), வீரசைவரும் சங்கமரும், இலிங்கதாரி’ என்பவர் யார், வீராகமம் என்பவை பற்றிப் பேச முனைகிறது.
1. கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீச்சரமும் சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் ஐயாவும்.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 1951 இல் பிறந்து பின்னர் கருவேப்பங்கேணியில்யில் வாழ்ந்து தனது 21 வது வயதில் (1972) கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீச்சரத்துக்கு வீரசைவ மரபைத் தலைமுறை தலைதுறையாகப் பின்பற்றிவந்த இலிங்கதாரியும் தனது பாட்டனாருமாகிய ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ செல்லையாக் குருக்களுடன் உதவிக் குருக்களாக ஆலயத்தில் இணைந்து கொண்டார். இவரும் வீரசைவ மரபைப் பின்பற்றுகின்ற இட்ட இலிங்கத்தைக் கழுத்து மாலையில் சேர்த்து மார்பில் அணிந்து கொண்ட இலிங்கதாரியாகவே ஆலயத்துக்குள் நுழைந்தார். அன்றுமுதல் இறுதியில் சில நாட்கள் நோய்வாயப்பட்டு இறக்கும்வரை (11.09.2026) அதிகாலையில் மார்பில் அணிந்திருந்த இட்டலிங்கத்துக்குத் தவறாது பூசை செய்து வந்தவர். வீரசைவ நெறிமுறையில் இறுதிவரைத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியவர். தனது வாழ்நாளில் பெரும்பாலான காலப்பகுதியைக் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீச்சரத்துடன் இணைத்துக் கொண்டவர்.
படுவான்கரைப் பிரதேசத்துப் பெரும்பாலாக மக்களிடத்தில் தனக்கெனவோர் தடம் பதித்தவர். அவர்களிடத்தில் சோதி ஐயா என்பது ஒரு மந்திரச் சொல்லாகப் பதிந்திருந்தன. அன்பு, பாசம், கனிவு, கருணை, நேசம் கலந்த நம்பிக்கையான சொல் அது. அவரிடம் ஒரு வசீகரம் இருந்தது. 54 வருடங்கள் ஆலயத்தில் உதவிக் குருக்களாக, பிரதம குருவாகப் பணியாற்றி இருந்தாலும் சிவஸ்ரீ செல்லையாக் குருக்களின் மறைவின் பின்னர் இருந்து நான்கு தசாப்த காலமாகச் சோதி ஐயா என்ற வசீகர நாமம் அவருடன் இறுதிவரை நிலைத்திருந்தது.
கோயில் தொடர்பாகவும், அப்பிரதேச மக்கள், அவர்களின் வாழ்வியல் தொடர்பாகவும், பூர்வீகம், பரம்பரை தொடர்பாகவும் மூன்று தலைமுறை வரலாற்றை அறிந்திருந்தவர். அத்தோடு புராண, இதிகாசங்கள், சித்தாந்த சாத்திரங்கள், திருமுறைகள், நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பாகவும் நீண்ட பரீட்சயம் கொண்டவர். இதனை அவரோடு உரையாடிய யாவரும் அறிந்திருப்பார்கள்.
தான்தோன்றீச்சரரின் ஆலயப் பூசைத் திருப்பணிக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்தது மாத்திரமன்றி விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, சார்ந்து பணியாற்றல், இணங்கிப் போதல் ஆகிய பண்புகளைக் கொண்டவராகவும் சாந்தமாகவும் வாழ்ந்தார். முரண்படல், வீண் விவாதங்கள், பிடிவாதம் என்பவற்றிலிருந்து விலகியவராகவே காணப்பட்டார். ஆலய தரிசனத்துக்காக வருகைதரும் அடியார்களில் பலர் “சோதி ஐயா இருக்கிறாரா?” என வினவிய பின்னரே தமது தரிசனத்தைத் தொடங்குவர். அதேபோல் பூசை முடிந்ததும் அவரைக் கண்டு பேசி மன அமைதி பெற்றுச் சென்றவர் பலர்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீச்சரர் ஆலயத்தில் சோதி ஐயா ஒரு நடமாடும் நூலகமாகக் காணப்பட்டார். அரிய வரலாற்றுப் பொக்கிசமாக வாழ்ந்த அவரிடம் பொதிந்து கிடந்த தரவுகள், தகவல்கள் பதிவு செய்து ஆவணமாக்கப்படாமல் அவருடன் மறைந்து போய்விட்டன. அத்தோடு ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலிங்கதாரிகளாகப் பூசை செய்து வந்த வீரசைவ பரம்பரையும் அற்றுப்போய்விட்டது. சோதி ஐயா உயிரோடு இருந்த காலத்தில் இலிங்கதாரி ஒருவரைப் பிரதம குருவாக நியமனம் செய்வதற்கு எடுத்த முயற்கள் யாவும் குறுகிய நோக்கம் கொண்ட ஒரு சிலரின் சதி முயற்சிகளால் கைகூடாமல் போய்விட்டது. மரபு, சம்பிரதாயம், பரம்பரை, பூர்வீகம், உரிமை, வரலாறு, வீரசைவம், பண்பாடு, பாரம்பரியம், பற்றியெல்லாம் பேசும் நாம் தான்தோன்றி இலிங்கத்துக்குப் பூசை செய்யும் வீரசைவ மரபைக் கைவிட்டு நிற்கிறோம். இப்படித்தான் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். இது இந்தச் சந்ததியினர் இவ்வாலயத்துக்குச் செய்த மிகப்பெரும் துரோகமாகும். ‘அரசன் அன்ற்றுப்பான். தெய்வம் நின்றறுக்கும்’. சோதி ஐயாவின் கனவும் நனவாகவில்லை.
2. இருக்கு வேதத்தில் சிவலிங்கம் பற்றிய சொல்லாடல்.
சிவலிங்க வடிவம் அதன் அமைப்புப் பற்றி இருக்கு வேதத்தில் நேரடியாகப் பேசப்படவில்லை என்றாலும், இருக்கு வேதத்தில் இடம்பெற்றுள்ள சில குறிப்பிட்ட மந்திரங்களும் அதில் வரும் ‘சிஸ்னதேவா’ (Śiśnadevá) என்ற சொல் பிற்கால விவாதங்களில் சிவலிங்க வழிடுபாடு பற்றிய விமரிசனங்களுடன் தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது.
இருக்கு வேதத்தின் 7 வது மண்டலம், 21 வது சூக்தம், 5 வது மந்திரம் (Rigveda 7.21.5) மற்றும் 10 வது மண்டலம், 99 வது சூக்தம், 3 வது மந்திரம் (Rigveda 10.99.3) ஆகியவற்றில் ‘சிஸ்னதேவா’ (Śiśnadevá) என்ற பதம் இடம்பெற்றிருக்கிறது. இதில் குறிக்கப்பட்டுள்ள “மா தேஷான் சிஸ்னதேவா ருதப் கற்” என்ற மந்திரம் பிற்காலத்தில் பல சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கின்றன. இம்மந்திரத்தின் நேரடிப் பொருளாகச் ‘சிஸ்ன’ (Śiśna) என்றால் சமஸ்கிருதத்தில் ஆணுறுப்பு எனவும். ‘தேவா’ (Deva) என்பது கடவுள் அல்லது வழிபடக்கூடியவர் என்ற பொருளையும் தரும். இதனால் இச்சொல்லுக்கு “ஆணுறுப்பைத் தெய்வமாக வணங்குபவர்கள்” அல்லது “பாலுறவு வழிபாட்டைச் செய்பவர்கள்” என்று பொருள் கொள்ளப்பட்டது.
பொ.ஆ.பி 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் ஆரிய, பிராமணர்கள் தங்களை எதிர்த்து வாதம் புரிந்த வீரசைவ பூர்வக் குடிகளையும், வேத நெறியைப் பின்பற்றாத எதிரிகளையும் குறிக்க இச்சொல்லை ஏளனமாகப் பயன்படுத்தியதாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் மெல்நாட்டு ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இந்த மக்களின் சடங்குகள் அல்லது நம்பிக்கைகள் வேத வழிபாட்டு முறைக்கு முரணானவை என்பதால், அவற்றை இகழ்ந்து பேசும் வகையில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
பிரித்தானியர் காலத்து கிழக்கிந்திய கம்பனி ஆய்வாளர்கள் (orientalists) மற்றும் சில
மேற்கத்தேய அறிஞர்களான ஜோன் மியூர், ஆர்தர் மக்டொனல்ட் போன்ற ஆய்வாளர்கள் இருக்கு வேதத்தில் வரும் இந்த ‘சிஸ்னதேவா’ என்ற சொல்லை சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தோ அல்லது அதற்கு முன்பிருந்தோ தொடரும் இலிங்க வழிபாட்டைக் குறிப்பதாக உறுதிப்படுத்தினர். இதன் அடிப்படையில், சிந்துவெளி காலத்திற்குப் பிந்திய ஆரியர்கள் பூர்வக் குடிகளின் இலிங்க வழிபாட்டைக் காம இச்சை கொண்டவர்களின் வழிபாடாகவும், முரட்டுத்தனமானதாகவும் நாகரிகமற்றதாகவும் கருதி ஏளனம் செய்துள்ளனர்.
இதேவேளையில், சைவ சித்தாந்த குரவர்களும், பல பாரம்பரிய சமஸ்கிருத அறிஞர்களும் மேற்கண்ட வாதத்தை முற்றிலுமாக மறுக்கின்றனர். வேதத்தில் வரும் ‘சிஸ்னதேவா’ என்பதற்கு ஆணுறுப்பு வழிபாடு என்று பொருள் கொள்ளாமல், இந்திரிய அடக்கமற்றவர்கள், காம இச்சை கொண்டவர்கள் அல்லது புலன்களைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் என்ற பொருளிலேயே (Metaphorical sense) அது கையாளப்பட்டுள்ளது என்கின்றனர். சிவலிங்கம் என்பது தூலமான ஆணுறுப்பைக் குறிப்பது அல்ல, அது பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமான ஜோதிப் பிழம்பின், ஆற்றலின் வடிவமான ‘பிரபஞ்ச லிங்கம்’ (Cosmic Pillar / Formless Absolute) ஆகும். இருக்கு வேத காலத்துச் சொற்களைப் பிற்கால உருவ வழிபாட்டு முறைகளுடன் நேரடியாகப் பொருத்துவது வரலாற்றுக் குற்றம் என்பது இவர்களின் வாதமாகும்.
சிந்துவெளி நாகரிகத்துக்குப் பிந்தியதும் ஈரானிலும் ஸ்ரெப்ஸ புல்வெளிப் பிரதேசத்திலும் இருந்தும் கைபர் கணவாய் ஊடாக மந்தை மேய்பதற்காக பொ.ஆ. மு 6 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டுக்கு வருகைதந்த ஆரிய, பிராமணர்கள் தமிழர் தம் நாகரிகத்தைச் சிதைத்து தமிழ்நாட்டிலுள்ள தெய்வங்களை வடநாட்டுக்கு எடுத்துச் சென்று இருக்கு வேதத்தையும் எழுதினர். இருக்கு வேதத்தில் சிவலிங்கத்தின் வடிவம் பற்றி நேரடியாக எந்த இடத்திலும் கூறப்ப்படவில்லை. மாறாக, வேத நெறிக்கு எதிரானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘சிஸ்னதேவா’ என்ற சொல் பிற்காலத்தில் இலிங்க வழிபாட்டு விமர்சனத்தோடு சிலரால் இணைத்துப் பேசப்பட்டது. சாதி, சமய சம்பிரதாயம், பெண் அடிமைத்தன் என்பவற்றைத் மிகத் திவிரமாகக் கடைப்பிடிக்கும் ஆரிய, பிராமணர்களால் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் வேத மந்திரம் கூறிச் சிவலிய்கத்தைத் தொட்டுப் பூசை செய்வதற்கு அவர்கள் இன்றுவரை மறுத்து வருகின்றனர்.
3. வீரசைவம் (இலிங்காயத் நெறி).
உலகில் தோன்றிய மூத்த நாகரிகம் தமிழர் தம் நாகரிகமாகும். உலகில் தோன்றிய மூத்த முதல் மொழி தமிழ். உலகில் முதல் மூத்த மதம் சைவம். இந்து மதம் ஆரிய பிராமணர்களால் திட்டமிட்டு எம்மிடையே திணிக்கப்பட்டது. உலகுக்கு நாகரிகத்தையும் வர்த்தகத்தையும், கடல்வழிப் போக்குவரத்தையும் கற்றுக் கொடுத்தவன் தமிழன். உலக மொழிகளில் முதன் முதவில் இலக்கணம் வகுத்த மொழி தமிழ் மொழி. ஆரம்பத்தில் இயற்கைக்கு நன்றிக்கடன் செலுத்தி வழிபட்ட தமிழன், தம்மைக் கொடிய மிருகங்களிடம் இருந்தும், பிறரிடம் இருந்தும் பாதுகாத்த தலைவன் இறந்த பின்னர் அவனை அடக்கம் செய்த இடத்தில் நடுகல் வைத்து வழிபட்டு வந்தனர். இவ்வழிபாட்டுமுறை பின்னாளில் வளர்ச்சியடைந்து, உலகத் தோற்றத்துக்கும் ஓடுக்கத்துக்கும் காரணமான சிவலிங்கத்தையும் வேலையும் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றனர். இதனைச் சிந்துவெளி, ஆதிச்ச நல்லூர், கீழடி, கங்கை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளும், தற்போது மேற்கொள்ளப்ப்ளப்பட்டுவரும் அகழாய்வுகளும் நிருபித்துக் கொண்டிருக்கின்றன. சிவலிங்கத்தின் மேற்பகுதி ஆண் குறியையும், கீழப்பகுதி (ஆவுடையார்) பெண் குறியையும் (யோனி), வேல் ஆணின் விந்தணுவையும் குறித்து நிற்கிறது. இயற்கை மற்றும் நடுகல்லுடன் இவை மூன்றும் சேர்ந்த வழிபாட்டு முறையே ஆதித்தமிழ்ச் சைவர்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
வீரசைவம் (இலிங்காயத் நெறி) என்பது சிவலிங்கத்தை (சிவபெருமானை) மட்டுமே முழுமுதற்கடவுளாக ஏற்று, உடலிலும் ஆன்மாவிலும் சிவலிங்கத்தைத் தாங்கி வாழும் ஒரு தனித்துவமான ஆன்மீக நெறியாகும்.
வீரசைவர் பிறப்பினாலோ, பரம்பரையினாலோ, சாதி, சமயம், கோத்திரங்கள் மூலமாகவோ உருவாகுவதில்லை. வீரசைவ இலிங்காயித இயக்கத்தில் (சங்கத்தில்) இணைந்து அல்லது இலிங்கதாரியிடம் இருந்து தீட்சை பெற்று, வீராகம விதிமுறைகளைக் கற்று, இட்டலிங்கத்தைத் தாயத்தாக அணிந்தவர் மாத்திரமே விருசைவராக இருக்க முடியும். அதைவிடுத்துத் தகப்பன்வழி, தாய்வழி. பரம்பரை உறவுகள் மூலமாக உருவாகுவதில்லை.
வீரசைவ சமூகம் மற்றும் அதன் தத்துவங்கள் நீண்ட கால வரலாற்றைக் கொண்டிருந்தாலும், பொ.ஆ.பி 2 ஆம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரால் புத்துயர் பெற்று நாயன்மார்களால் வளர்க்கப்பட்டு, 12 ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் ஒரு மாபெரும் சமூக, ஆன்மீக இயக்கமாக எழுச்சி பெற்றது. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் சமய மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறுவர். அதற்கு முன் வழக்கில் இருந்த சாதியப் பாகுபாடுகள், மூடநம்பிக்கைகள், சடங்கு, சம்பிரதாயங்கள் ஆகியவற்றை எதிர்த்து, சமய சமத்துவம், பக்தி நெறியை அடிப்படையாகக் கொண்டு வீரசைவ இயக்கம் மறுமலர்ச்சி பெற்றது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட பல தென்னிந்திய மாநிலங்களில் இந்நெறி பரவி, கோடிக்கக்கான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆதியில் எப்படி, எங்கு, எவ்வாறு, யாரால் வீரசைவம் தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாதுள்ளது. நாயன்மார்களால் வளர்த்தெடுக்கப்பட்ட வீரசைவ நெறியை ஒரு சமூக இயக்கமாக மாற்றி, சீர்திருத்தங்களை முன்னெடுத்த முக்கிய ஆன்மீகத் தலைவர் பசவண்ணர் (பசவேஸ்வரர (Basavanna) ஆவார். இவர் 12 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்/கலச்சூரி மன்னன் பிஜ்வலனின் அரச சவையில் மந்திரியாகப் பணியாற்றியவர். இவருடன் அல்லம பிரபு, அக்கம்மாதேவி, சென்னபசவண்ணர் போன்ற பல ஆன்மீகப் பெரியார்களும் சிவசரணர்களும் இணைந்து ‘அனுபவ மண்படம்’ (Anubhava Mantapa) என்ற ஆன்மீக மடாலயத்தை உருவாக்கி, சமத்துவ சமுதாயத்திற்கான வசன இலக்கியங்களை உருவாக்கினர்.
4. வீரசைவரும் சங்கமரும்.
சங்கமர் (இலிங்காயதர்) என்பவர்கள், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் தோன்றிய வீரசைவ மரபைப் பின்பற்றும் ஆன்மீக மற்றும் சமூகப் பிரிவினராகவே அறியப்படுகிறார்கள். இவர்களது ஆன்மீக இயக்கத்தைத் தோற்றுவித்தவர் பசவேஸ்வரரும் (பசவண்ணர்) அவரது சமகால ஆன்மீகப் பெரியோர்களும் ஆவார்கள்.
இலிங்காயதர் என்பது இலிங்கம் + ஆதர் என்ற சொற்களின் கூட்டமைப்பாகும். அதாவது, தமது உடல் மீது எப்போதுமே ‘இட்டலிங்கம்’ (சிவ அடையாளமாகிய சிறிய இலிங்கம்) ஒன்றை அணிந்திருப்பவர்கள் என்று பொருள்படும். பசவண்ணர் ஆரம்பித்த லிற்காயத இயக்கத்தில் (சங்கம் அல்லது மடாலயத்தில்) இணைந்து தீட்சை பெற்றுப் பூநூல் அணிந்தவர்கள் யாவரும் சங்கமர்கள் என அழைக்கப்பட்டார்கள்.
வீரசைவ மரபில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி, ஆன்மீகச் சந்திப்புகளை (சங்கம்) நிகழ்த்திய ஆன்மீகப் பணியாளர்களைக் குறிக்கும் சொல்லாகவும் இது விளங்குகின்றது.
சங்கமர்கள் முழுமுதற்கடவுளாகச் சிவபெருமானையே வழிபடுகின்றனர். எனினும், உருவ வழிபாட்டைத் தாண்டி, சிவத்தின் வடிவமான இட்டலிங்கத்தை நேரடியாக உடம்பில் அணிந்து வழிபடும் முறையைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஆரிய, பிராமண மேலாதிக்கத்தால் அக்காலச் சமூகத்தில் வேரூன்றியிருந்த சாதி வேறுபாடுகள், தீண்டாமை, சமூகப் பாகுபாடுகள் ஆகியவற்றைத் தீவிரமாக எதிர்த்தனர். பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கையைச் சமுதாயத்தில் விதைத்தனர்.
பசவண்ணரால் நிறுவப்பட்ட ‘அனுபவ மண்டபம்’ என்னும் ஆன்மீகப் பேரவையில் அனைத்துச் சாதியத்தையும் சேர்ந்த சாமானியர்களும், பெண்களும் ஒன்றிணைந்து ஆன்மீக, தத்துவ விவாதங்களில் ஈடுபட்டனர்.
சமூகக் கட்டுப்பாடுகளை மறுத்து, பெண்களுக்கு ஆன்மீகத்தில் சம உரிமை வழங்கினர். அக்காலத்தில் அக்கம்மாதேவி போன்ற பெண் புலவர்கள் இம் மரபிலிருந்து தோன்றி ஆன்மீகப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தைக் குறைத்து, எளிய மக்கள் பேசும் கன்னட மொழியிலேயே தமது தத்துவக் கருத்துக்களைப் பாடல்களாகப் படைத்தனர். இப்பாடல்கள் ‘வசனங்கள்’ (Vachanas) என அழைக்கப்படுகின்றன.
வீரசைவர், சங்கமர் (லிங்காயத்துக்கள்) ஆகிய இரண்டும் அடிப்படையில் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடைய ஆன்மீக மரபுகள் ஆகும். ஆனாலும், இவற்றின் வரலாற்றுப் பின்னணி, தத்துவார்த்த வேறுபாடுகள், சமூக அடையாளம் குறித்து அறிஞர்களிடையே பல விவாதங்கள் காணப்படுகின்றன.
சங்கமர் அல்லது ‘ஜங்கமர்'(Lingayats /Jangamas) என்பவர்கள் வீரசைவ/இலிங்காயத்துச் சமூகத்தில் நடமாடும் ஆன்மீக குருமார்களைக் குறிப்பவர். அதே நேரத்தில், பத்தாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் உருவான பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணர் (Basavanna), அல்லம பிரபு, அக்கம்மாதேவி ஆகியோரால் வளர்க்கப்பட்ட சமூகமே ‘இலிங்காயத்துகள்’ என அழைக்கப்படுகிறது. வீரசைவ லிங்காயத்து இயக்கத்திற்கு முன்பே இருந்த, அல்லது அதனுடன் இணைந்த ஒரு சாக்த/சைவப் பிரிவு ஆகும். ஆகம நெறிமுறைகளைப் பின்பற்றி, சிவ வழிபாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் மரபு வீரசைவத்துக்குரியது.
வீரசைவர், சங்கமர் ஆகிய இருவருமே தங்கள் உடல் மீது இட்டலிங்கம் அணிவதை
வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிவனே முழுமுதற் கடவுள் என்ற கோட்பாடும், இலிங்க வழிபாடும் இருவருக்கும் பொதுவானவை. இரு மரபுகளிலும் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய கோட்பாடுகளை மையமாகக் கொண்டவை. இதில் சங்கமர் ஆன்மீக வழிகாட்டிகளாகவும் சமூகத்தை நெறிப்படுத்துபவர்களாகவும் விளங்குகிறார்கள். காலப்போக்கில் வீரசைவ மரபும் பசவண்ணரின் பக்தி இயக்கமும் ஒன்றுக்கொன்று கலந்துவிட்டன. பல சந்தர்ப்பங்களில் ‘வீரசைவர்’, ‘இலிங்காயத்து’ என்ற சொற்கள் ஒரே பொருளில் அல்லது ஒரே சமூகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
வீரசைவம் வேதங்கள், ஆகமங்களுடன் பாரம்பரிய சைவ சித்தாந்தங்களை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. இது பிராமணிய அல்லது ஆகம மரபிற்கு நெருக்கமானது. சங்கமர்கள் பசவண்ணர் மற்றும் சரணர்களால் அருளப்பட்ட வசன இலக்கியத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளனர். வேதங்களை விட மனிதநேயம், சமத்துவம், மற்றும் பகுத்தறிவுக் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
பசவண்ணர் சாதி அமைப்பையும், தீண்டாமையையும், மூடநம்பிக்கைகளையும் கடுமையாக எதிர்த்தார். இலிங்காயத்து இயக்கம் சாதி மறுப்பு இயக்கமாகவே தோற்றம்பெற்று வளர்ந்தது. ஆனால், மரபுவழி வீரசைவத்தில் சில சாதியக் கட்டமைப்புகளும் ஆகம நெறிமுறைகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. வீரசைவர்கள் ஆகம விதிமுறைப்படி தீட்சை பெறுபவர்களாகவும், இலிங்காயத்துகள் குரு மூலமாக இட்டலிங்க தீட்சை பெற்றுச் சமத்துவமாக வாழ்பவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.
வீரசைவரும் சங்கமர்களும் சிவதத்துவத்தைப் பின்பற்றுவதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போன்றவர்கள். வரலாற்று ரீதியாக இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இருப்பினும், நவீன காலத்தில் தத்துவார்த்த அடிப்படையில் சங்கமர்கள் தங்களைத் தனித்துவமான சுயாதீனமானதொரு ஆன்மீக மரபாகவும், வீரசைவர்களைச் சைவ சித்தாந்தத்தின் ஒரு பிரிவாகவும் அடையாளப்படுத்துவர்.
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வீரசைவ நெறியைப் பின்பற்றியோர் வந்தாறுமூலையிலும் சங்கமர்கள் தம்பட்டை, திருக்கோயில், தம்பிலுவில், கோமாரி, பனங்காடு, அக்கரைப்பற்று, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களிலும் வசித்து வந்தனர். இவர்கள் தங்களைச் சங்கமர்கள் என்றே அழைத்து வருகின்றனர். இவர்களில் பலர் பிற தொழில்கள் காரணமாக இக்கருமங்களில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். இப்பிரதேங்களில் முன்பிருந்த சங்கமர்களும், தற்போதுள்ள ஒருசிலரும் பூநூலை மாத்திரமே அணிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. இலிங்கதாரி என்படுபவர்.
இலிங்கதாரி’ என்றால் “இலிங்கத்தை மார்பில் அணிந்து கொண்டவர்” என்று பொருள்படும். வீரசைவ நெறியைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் எப்போதும் தங்களின் உடலில் குருவினால் வழங்கப்பட்ட இட்டலிங்கத்தை (சிறிய சிவலிங்கம்) ஒரு நுலில் அல்லது கயிற்றில் கட்டிக் கழுத்திலோ அல்லது உடலிலோ பாதுகாப்பாக அணிந்திருப்பார்கள். இவர்கள் தான் ‘இலிங்கதாரிகள்’ என அழைக்கப்படுகிறார்கள். இலிங்கத்தை அணியாதவர்கள் வீரசைவர்களாக இருக்க முடியாது. இலிங்காயதக் கோட்பாட்டின்படி, உடலே ஒரு கோவில், அந்த உடலுக்குள் ஆன்மா வசிப்பது போல, அந்த ஆன்மாவுடன் இணைந்தே இட்டலிங்கம் எப்போதும் உன்னதப் பாதுகாப்புடன் உடலில் தொங்கிக் கொண்டிருக்கும்.
வீரசைவ நெறியில் இணைவதற்குப் பரம்பரை, பிறப்பு, வகுத்துவார், பாகை, சாதி என்பதெல்லாம் முக்கியமல்ல. யாரும் இணைந்து கொள்ளலாம். மாறாக முறையான தீட்சை பெறுவதே முக்கியமானது. ஒருவர் வீரசைவ நெறியை ஏற்க விரும்பினால், அவர் முறையான குருவிடம் அல்லது மடாதிபதியிடம் அல்லது இலிங்கதாரியிடம் சென்று ‘இட்டலிங்க தீட்சை’ பெற வேண்டும். குருவானவர் அந்த நபருக்கு சிவபூஜையின் தத்துவங்களை விளக்கி, மந்திரோபதேசம் செய்து, வெள்ளி அல்லது பாசாணத்தால் செய்யப்பட்ட சிறிய ‘இட்டலிங்கத்தை’ முறைப்படி வழங்குவார். அன்றிலிருந்து அந்த நபர் தீவிரமான சிவதொண்டராகவும், சைவ நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராகவும் சைவ உணவு முறை, எளிமையான வாழ்க்கை, சமத்துவ சிந்தனை ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகும் வீரசைவராகக் கருதப்படுவார். இவரின் கழுத்தில் மாலையில் தொங்கவிடப்பட்டிருக்கும் இட்டலிங்கத்துக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து காலைக் கடன்கள் முடித்து நீராடிப் பூசை செய்வார். அதன் பின்னரே ஏனைய கடமைகளில் ஈடுபடுவார். இலிங்கதாரி ஒருவர் தினமும் ஒரு தடவையாவது தவறாது இலிங்க பூசை செய்வது கடமையாகும்.
6. வீராகமம்.
வீராகமம் என்பது வீரசைவ நெறியின் மிக முக்கியமான, அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் ஆகம நூலாகும். இது சிவபெருமானின் உறைவிடமாகவும், சித்தாந்தங்களின் தொகுப்பாகவும் கருதப்படுகின்றது. இருபத்தெட்டு சிவாகமங்களில் இது ஒன்றாகும்.
வீராகமம் சிவபெருமானின் திருவாயிலிருந்து வெளிப்பட்டதாக நம்பப்படும் ஆன்மீக மற்றும் தத்துவ நூலாகும். இது பக்தி, ஞானம், கிரியை (வழிபாட்டு முறைகள்) மற்றும் யோகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. குறிப்பாக, இலிங்காயத்து அல்லது வீரசைவ சம்பிரதாயத்தின் ஆன்மீக வழிமுறைகளுக்கும், சமூக நெறிமுறைகளுக்கும் இதுவே மூலவேராக அமைகிறது உடலின் மீது இலிங்கம் அணிவது, (இலிங்க தாரணம்) அதன் ஆன்மீகப் பொருளான சிவசம்பந்தத்தை இது ஆழமாக விளக்குகிறது.
சாதி பேதங்களையும், பிறப்பு அடிப்படையிலான உயர்வு தாழ்வுகளையும் மறுத்து, சிவ பக்தியே பிரதானம் என்ற சமத்துவக் கொள்கைக்கு ஆகம அடிப்படையில் வலுச் சேர்க்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு வீரசைவரின் வாழ்க்கையில் செய்யப்பட வேண்டிய வழிபாட்டுச் சடங்குகளுக்கான நெறிமுறைகளை வகுத்துக் கூறுகிறது.
வீரசைவர்கள் தங்கள் தினசரி சிவபூசையில் (இலிங்க பூசை) வீராகமத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பூசையைத் தொடங்குவதற்கு முன் குருவையும், தமது கையில் அல்லது உடலின் மீது தாங்கியுள்ள ‘இட்டலிங்கத்தையும்’ வழிபடுவதற்கான முறைகள் வீராகமத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிவபூஜையின் போது அனுசரிக்கப்படும் பிராணப்பிரதிஷ்டை, சோடசோபசார வழிபாடு (பதினாறு உபசாரங்கள்) மற்றும் சிவ பஞ்சாட்சர மந்திர உச்சாடன முறைகள் இந்த ஆகமத்தின் வழிநடத்துதலின்படியே செய்யப்படுகின்றன. பூசை செய்யும் இடத்தின் தூய்மை, மன ஒருமைப்பாடு மற்றும் பக்திப் பெருக்குடன் செய்யப்படும் கிரியைகள் அனைத்தும் வீராகமத்தின் விதிமுறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
சைவ சமயத்தவர்கள் சிவபெருமானால் அருளப்பட்ட 28 சிவ ஆகமங்களையும் மூல நூல்களாகக் கருதுகின்றன. இந்த 28 ஆகமங்களில் பொதுவான சைவ தத்துவங்கள் முதல் பகுதியிலும், அதனை விடவும் சிறப்பான வீரசைவத்திற்கே உரிய பிரத்தியேக தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் ஆகமங்களின் இறுதிப் பகுதிகளிலும் (Agamanta) விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இதனாலேயே வீரசைவ நெறியை ‘ஆகமாந்தம்’ என்றும் அழைக்கின்றனர்.
சிவலிங்கத்தை (சிவபெருமானை) வழிபடும் முறைகள், கிரியைகள், பூசை முறைகள், ஆலய அமைப்பு முறைகள், யோக முறைகள், பிரபஞ்சத்தின் இயல்பு நிலை போன்றவற்றை ஆகமங்கள் விரிவாக விளக்குகின்றன. வீரசைவத்தின் தத்துவப் பின்னணியான ‘சக்தி விசிட்டாத்துவைதக்’ கோட்பாட்டின் வேர்கள் இந்த ஆகம நெறிகளிலிருந்து பெறப்பட்டவையாகும். வேத காலச் சடங்குகளைப் போலன்றி, ஆகம முறைகள் சாதி, மத பேதமின்றி அனைவரையும் ஆன்மீகத்தில் அனுமதிக்கக்கூடிய வகையில் தாராளமான விதிகளையும் யோக மார்க்கங்களையும் கொண்டுள்ளன. வீரசைவர்கள் தங்களின் அன்றாட ஆச்சார விதிமுறைகளுக்கும், இட்டலிங்க வழிபாட்டு முறைகளுக்கும் இந்த ஆகமங்களின் வழிமுறைகளையே பிரதான வழிகாட்டியாகக் கொள்கின்றனர்.
இந்த அடிப்படையில் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீச்சரர் ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக வீராகம முறைப்படியே பூசைகள், கிரியைகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. 1917 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியமனம் பெற்ற களுவாஞ்சிக்குடி சங்கமக் குருக்களான சிவஸ்ரீ சின்னத்தம்பிக் குருக்கள் உட்பட அதற்குப் பின்னர் நியமனம் பெற்ற வீரசைவக் குருமாரும் வீராகம முறைப்படி பூசைகள், கிரியைகள் செய்வதைத் தவிர்த்து வந்தனர். இந்நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.
சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இவ்வாலயத்தில் வீராகம முறைப்படி பூசைசெய்யாவிட்டாலும் எண்ணம், சொல், செயல்களால் வீரசைவனாகவே வாழ்ந்தவர். உடல், மனக் கட்டுப்பாடுகளோடு இறுதிவரைப் பிரமச்சாரியாகவே வாழ்ந்தவர். அவர் உணவு உண்ணும்போது யாராவது ஆலயத்தில் போசனமின்றி இருந்தால் அவர்களுக்கும் கொடுத்து தான் உண்ணும் வழக்கத்தை இறுதிவரைக் கடைப்பிடிதவர். இத்தனை பண்புகள் நிறைந்த சோதி ஐயாவின் இழப்பு பேரழப்பாகும். ஆலயத்தில் அவரின் வீரசைவப்பணி தொடர வேண்டும். அதற்கு அப்பிரதேச மக்கள் விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும். இப்போக்கு நீடித்தால் காலப்போக்கில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார், அமிர்தகழி மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் என மாற்றம் பெற்றதுபோல் கொக்கட்டிச்சேலை ஸ்ரீ தான்தோன்றிச்சரர் ஆலயமும் சுயம்புலிங்கப் பிள்ளையாராக மாறலாம்.
![]()