கிழக்குப் பல்லைக்கழக வேந்தராகும் பேராசிரியர் சி. மௌனகுரு…. நனவிடைதோய்தற் குறிப்புகள்…. முருகபூபதி


இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் நியமனமாகியிருக்கும் செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் இந்த பதிவை எழுதுகின்றேன்.
பேராசிரியர் சி.மௌனகுரு, கல்வி, கலை,இலக்கிய ஊடகத்துறையிலும் பங்காற்றி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்குப்பல்கலைக்கழகம் முதலானவற்றில் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.
கடந்த காலங்களில் ஓய்வுநிலைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கும் சி. மௌனகுரு அவர்கள் தான்சார்ந்த கலைத்துறையில் குறிப்பாக கூத்து, நாடகம் முதலானவற்றில் சாதனைகள் புரிந்தவர்.
பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் பட்டதாரியான சி. மௌனகுரு, அவர்கள் தாம் கற்ற அதே பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தையும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தின் பாட நூல் எழுத்தாளராகவும், . பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் முன்னர் பணியாற்றினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் வளர்ச்சியில் உந்து சக்தியாகத்திகழ்ந்தார். பின்னாளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவராகவும், கலை,பண்பாட்டுகள் பீடத்தின் பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பதவிகளை வகித்தார். , சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இணைப்பாளராகவும், நூலகக் குழுத்தலைவராகவும் தமிழ்ச் சங்கத்தின் காப்பாளராகவும் இயங்கி வந்திருப்பவர்.
மௌனகுரு அவர்களை கடந்த 1972 ஆம் ஆண்டுமுதல் நன்கறிந்து இலக்கிய நட்புறவை வளர்த்துவந்திருப்பதனால், இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த நனவிடை தோய்தற்குறிப்புகளை எழுதுகின்றேன்.
கூத்து, நாடகம், முதலான அவரது பிரதான கலைப்பணிக்கு அப்பால், நெடுங்கதை இலக்கியத்துறையில் அவர் பதித்திருக்கும் ஆழமான தடம் குறித்த பதிவாகவும் இது அமையலாம்.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த ( 1972 ) காலப்பகுதியில், நான் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன்.
அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.
அவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும்.
அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன்.
சார்வாகன், அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனனே சொன்னார்.
மகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து வெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து, அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர்.
அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வாகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன்.
துணிவுடன் தனக்கு சரியெனப்பட்டதைச் சொன்ன, சார்வாகன் பற்றிய முழுமையான கதையை பல வருடங்களின் பின்னரே இலக்கியப்பிரதியாக படித்தேன்.
அதனை எழுதியிருப்பவர்தான் மௌனகுரு.
9-06-1943 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்திருக்கும் சின்னையா மௌனகுரு அவர்களைப்பற்றித் தெரிந்தவர்கள், அவர் சார்ந்த நாடகம், கூத்து, விமர்சனம், கல்வி முதலான துறைகளின் ஊடாகத்தான் அவர் பற்றிய பதிவுகளை எழுதுவார்கள். பேசுவார்கள். ஆய்வுசெய்வார்கள்.
ஆனால் , அவருக்கும் படைப்பிலக்கிய பக்கம் ஒன்று இருக்கிறது என்பதை கலை – இலக்கிய உலகிற்கு தெரியப்படுத்தியது பேராசிரியரின் மணிவிழாக் காலத்தில் வெளியான மௌனம் என்னும் சிறப்பு மலர்.
2003 ஆம் ஆண்டு வெளியான அந்த மலர் எனது கைக்கு கிடைப்பதற்கு முன்னர்
மௌனகுரு எழுதிய சார்வாகன் குறுநாவல் பற்றி சிலர் விதந்து சிறப்பித்து என்னிடம் தொலைபேசி ஊடாகச்சொன்னபொழுது – 2004 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா கன்பரா மாநிலத்தில் நடந்த எமது நான்காவது எழுத்தாளர் விழாவுக்கு வருகைதந்த சகோதரி – சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவகௌரியிடம் சொல்லி எனக்கு ஒரு பிரதியை தருவித்தேன்.
இம்மலருக்கு பதிப்புரையும் அறிமுகவுரையும் எழுதியிருக்கும் பிரதேச செயலாளர் வெ.தவராஜா, ஐந்து பகுதிகளைக்கொண்டது எனக்குறிப்பிட்டு – மலரின் ஐந்தாவது பகுதி பேராசிரியரின் படைப்புகளை உள்ளடக்கியது என்றும் அது அவருடை இன்னுமொரு பக்கத்தைக் காட்டும் எனவும் குறிப்புணர்த்துவதிலிருந்து, மௌனகுரு ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர் என்ற பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத மற்றும் ஒரு விடயத்தையும் புரிந்துகொள்கின்றோம்.
சார்வாகன் என்ற அவருடைய குறுநாவல் படைப்பிலக்கியத்தில் மிக முக்கியமானதொரு கதை. எழுத்தாளர்கள், வாசகர்கள் அவசியம் படிக்கவேண்டியது.
அவருக்கும் எனக்குமான நட்புறவுக்கு ஐந்து தசாப்தகாலம் கடந்துவிட்டது. அவர் சித்திரலேகாவை திருமணம் செய்துகொண்ட 1973 காலப்பகுதியில் அவர்களை தம்பதி சமேதராக நான் சந்தித்த இல்லம் கொழும்பில் கலை, இலக்கியவாதிகள் அடிக்கடி சந்திக்கும் ஒரு கலாபவனம் ஆகும்.
அக்காலப்பகுதியில் பாமன்கடையில் ‘அப்பல்லோ ‘ சுந்தா சுந்தரலிங்கம் – பராசக்தி அக்கா தம்பதியர் தமது மகளுடன் வசித்த அந்த மாடி வீட்டின் ஒரு பகுதியில் கவிஞர், சிவானந்தனும் மற்றும் ஒரு பகுதியில் மௌனகுருவும் சித்திரலேகாவும் இருந்தனர். கவிஞர் முருகையனும் அடிக்கடி அங்கே வருவார். அங்கு கலை, இலக்கிய சந்திப்புகள் நடக்கும். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டதும் கொழும்பிலிருந்த பலரை தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார் பேராசிரியர் கைலாசபதி. அவ்வாறு மௌனகுருவும் சித்திரலேகாவும் அங்கு இடம்பெயர்ந்து சென்றபின்னரும் எமக்கிடையிலான நட்புறவு தொடர்ந்தது.
1975 இல் வெளியான எனது முதலாவது சிறுகதைத்தொகுதி சுமையின் பங்காளிகள் – மல்லிகைப்பந்தல் சார்பாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்ட வேளையில் வருகைதந்து உரையாற்றி ஷோசலிஸ யதார்த்தப்பார்வை குறித்து தனது பார்வையை சொன்னவர். அவருடனான நட்புறவு நான் புலம்பெயர்ந்துவந்த பின்னரும் இன்றுவரையில் நீடிக்கிறது.
எனக்கு மௌனகுருவைப்பற்றி நினைக்கும்தோறும் சிறுவயதில் நான் விரும்பி ஓடிய அஞ்சலோட்டம்தான் நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் ஒருவரால் தொடங்கப்படும் அஞ்சல் ஓட்டம் அந்தக்கோலுக்காக துடிப்போடு காத்து நிற்கும் மற்றவர்களின் தொடர் ஓட்டத்தால் முடித்துவைக்கப்படும். அதே சமயம் மீண்டும் ஓடலாம் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும்.
1964 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் உருவாக்கிய இராவணேசன் கூத்தில் தமது பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் இராவணேசனாக தோன்றிய மௌனகுரு அவர்கள், தொடர்ந்தும் அதனை முன்னெடுத்து வந்ததுடன் தமது மாணாக்கர்களையும் பயிற்றுவித்து அரங்காற்றுகை நிகழ்த்திவருகிறார். தமது எழுபத்தி ஐந்து வயதிற்குப்பின்னரும் அந்த வேடத்தில் உற்சாகமாக திகழ்ந்தார். இந்த அஞ்சலோட்டம் அரங்காற்றுகையாக தொடர்கிறது. தலைமுறைகள் கடந்தும் பேசப்படுகிறது.
கிழக்கிலிருந்து இலக்கிய நண்பர் மைக்கல் கொலின் வெளியிட்ட மகுடம் சிறப்பு மலரிலிருந்தும், மற்றும் பல ஆக்கங்களிலிருந்தும், அவர் எம்மத்தியில் வாழும் பெறுமதியான மனிதர் என்பதற்கு நிரூபணம் என்றே கருதுகின்றேன்.
மகுடம் சிறப்பிதழில் மௌனகுருவின் நீண்டதொரு நேர்காணல் வெளியாகியிருந்தது. சங்க காலம் முதல் சமகாலம் வரையில் என்ற தலைப்பில் இடம்பெற்ற அந்த நேர்காணலில் பேராசிரியர் செ. யோகராசா கேட்டிருந்த கேள்விகளும், அதற்கு மௌனகுரு வழங்கிய பதில்களும் கலை இலக்கிய வாசகர்களுக்கு மிகுந்த பயனைத்தரவல்லவை.
இன்று எம்மத்தியில் நண்பர் பேராசிரியர் யோகராசாவும் இல்லை.
என்பது ஆழ்ந்த துயரத்தை தருகிறது.
குறிப்பிட்ட நீண்ட நேர்காணல் தனிநூலாக மட்டக்களப்பில் பேராசிரியரின் கடந்தசென்ற ஒரு பிறந்த தினத்தின்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
அவரது ஆற்றுகையிலிருந்தும் ஒரு பெயரை அவுஸ்திரேலியா இரவல் வாங்கியிருக்கிறது என்பதையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.
அவர் இலங்கையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணாக்கர்களுக்காக எழுதி இயக்கியது வேடனை உச்சிய வெள்ளைப்புறாக்கள். எமக்கு நன்கு தெரிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் கதைதான். மௌனகுரு அதனை எவ்வாறு அரங்காற்றினார் என்பது தெரியாமலேயே அந்தப்பெயரை தலைப்பாகக்கொண்டு சிட்னி கலைஞர் சந்திரஹாசன், ஒரு கவிதை நாடகம் எழுதினார். அதில் ( மெல்பனில்) எனது பிள்ளைகளும் நண்பர்களின் பிள்ளைகளும் நடித்தனர். ஆனால், இந்தத்தகவல் மௌனகுரு அறிவாரா…? என்பது எனக்குத்தெரியவில்லை.
வழக்கமாக நாம் நாட்டுக்கூத்து என்றே அழைக்கின்றோம். ஆனால் அப்படியல்ல கூத்து என்றே எழுதுங்கள், பேசுங்கள் என்று எம்மைத் திருத்தியவர் அவர்.
எப்படி சார்வாகன் ஊடாக சமூகத்துக்கு ஒரு செய்தியை சொன்னாரோ அதுபோன்று இராவணேசன் மனைவி மண்டோதரி ஊடாகவும் சமூகத்துக்கு முக்கியமான செய்தியை வெளியிட்டார்.
சார்வாகன் போரின் அழிவைச் சாடினார். மண்டோதரி போரினால் வரக்கூடிய இழப்புகளைச் சொன்னாள். இரண்டு செய்திகளும் மௌனகுருவின் எழுத்திலும் ஆற்றுகையிலும் அழுத்தமாக பதிந்துள்ளன.
கொழும்பில் அமரர் நீலன் திருச்செல்வம் நினைவு அமைப்பினருக்காக அவர் இராவணேசனை மீண்டும் 2010 இல் நவீனப்படுத்தி அரங்கேற்றினார். அதன் பின்னால் பலருடைய உழைப்பு இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டி மேடையில் அவர்களை அறிமுகப்படுத்தினார். சுமார் இரண்டு மணிநேரங்கள் இடம்பெறும் இராவணேசன் சிறந்த ஒளிப்பதிவுடன் எமக்கு இறுவட்டாக கிடைத்துள்ளது. அத்துடன் மௌனகுரு தமது 70 வயதில் பங்கேற்ற இராவணேசனும் மண்டோதரியும் சந்திக்கும் இறுதிக்காட்சி சுமார் இருபது நிமிடங்கள். இரண்டையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவுஸ்திரேலியாவில் பலருக்கும் கிடைத்தது.
1964 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் அஞ்சலோட்டமாகவே தொடர்த்து வருகிறான் இராவணேசன். அந்தத் தொடர் ஓட்டத்தில் பேராசிரியர் மௌனகுருவின் அயராத உழைப்பினைக் காண்கின்றோம்.
நாட்டுக்கூத்தை, கூத்து என்றே அழையுங்கள் எனச்சொல்லிவரும் மௌனகுரு, தமது நாடகங்ளிலும் பாரதியின் பல கவிதை வரிகளை இடம்பெறச்செய்துள்ளார். இவரது மழை என்னும் நாட்டிய நாடகத்தில், ” திக்குகள் எட்டும் சிதறி தக்கத்தீம் தரிகிடதீம் “எனத்தொடங்கும் மழைப்பாடலை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
மழையைக் காணாத மக்கள் வரட்சியினால் வாடித் துன்பப்படுகிறார்கள். இறுதியில் நம்பிக்கையின் அடிப்படையில் யாகம் முதலான நிகழ்த்துகையின் மூலம் மழையை வரவழைக்க முயற்சிக்கிறார்கள். பின்னர் சுயமுயற்சியால் மழையை கொணர்கிறார்கள். அந்தக்காட்சிக்கு பாரதியின் பின்வரும் கவிதை வரிகளை பயன்படுத்தியிருக்கிறார்.

“வெட்டியடிக்குது மின்னல் – கடல்வீரத் திரை கொண்டு விண்ணையிடிக்குது – கொட்டியிடிக்குது மேகம் –கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று சட்டச் சட சட சட்டா “
மெளனகுரு அவர்களின் தகவல்களின் பிரகாரம் இந்நாடகம் இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரமின்றி நோர்வேயிலும் மேடையேறியிருக்கிறது.
மௌனகுரு தயாரித்து இயக்கிய நம்மைப்பிடித்த பிசாசுகள் என்னும் நாடகத்திலும் பாரதி ஒரு கதாபாத்திரம். இதில் பாரதி சிலை உயிர் பெறுகிறது. இலங்கைத் தமிழர் சமூகத்தில் நடக்கும் பிரதேச வாதம், பெண் அடக்குமுறை, சீதனப் பிரச்சினை, அந்நிய மோகம் என்ற பிசாசுகளைப் பாரதி காண்கிறார். நம்மைபிடித்த இப்பிசாசுகளை அடித்துக்கலைக்குமாறு பாரதி மக்களுக்கு ஆணையிடுகிறார் .
ஒரு கட்டத்தில், ” இவைகளைச் செய்ய உன்னால் முடியாவிட்டால் செத்துப்போ… அதுவே நன்று” என உறுக்குகின்றார் விழிப்புணர்வு பெற்ற மக்கள் பாரதியின் ஜெயபேரிகை கொட்டடா… கொட்டடா… என்ற அந்த விடுதலைக் கீதத்தை இசைத்தபடி பிசாசுகளை விரட்டி விடுதலைக் கூத்தாடுகிறார்கள்.
மழை என்ற மெளனகுருவின் நாடக நூலுக்கு, இலங்கையின் மூத்த கவிஞர் (அமரர்) இ.முருகையன் எழுதியிருக்கும் முன்னுரையில், ” இப்புத்தகத்தில்வரும் இன்னுமொரு நாடகம் நம்மைப்பிடித்தபிசாசுகள். அந்நியநாட்டுமோகம், பிரதேச பேதங்கள், உத்தியோக மோகம்,சீதனம் எனும் சின்னத்தனம், ஆகிய சமூகக் குறைபாடுகள் எல்லாவற்றையும் பிசாசுகளாக உருவகம் செய்கிறார். இவற்றினால் மக்கள் பலர் உருவெறி ஆடுகிறார்கள். ஆனால், இந்தப் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு பாரதியார் சொல்லும் ஒரு மந்திரம் உதவுகிறது. அந்த மந்திரம் ஒரு பாட்டு: அச்சமில்லை அணுங்குதல் இல்லை நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை பாவம் இல்லை பதுங்குதல் இல்லை ஏது நேரினும் இடர்படமட்டோம். கண்டம் சிதறினும் அஞ்சமாட்டோம் கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம். யார்க்கும் அஞ்சோம். எதற்கும் அஞ்சோம். எங்கும் அஞ்சோம். எப்பொழுதும் அஞ்சோம். இன்னும் மந்திரங்கள் பல ஓதப்படுகின்றன. அவைகள் எல்லாம் பாரதி பாட்டுக்களே.

நம்மைப் பிடித்த பிசாசுகளில் பாரதியார் சொற்களும் கருத்துக்களும், உணர்வோட்டங்களும் தாராளமாக இடம் பெற்றுள்ளன. மௌனகுருவின் ஆக்கங்களில் பாரதியாரின் செல்வாக்குக் கணிசமாக மேலோங்கி நிற்பதைக் காணுகின்றோம் . பாரதியின் ஆளுமையின் ஆட்சித்திறன் என்று இதனை விபரிக்கலம்.
இலங்கையில் நாடகம், கூத்து முதலானவற்றில் பாரதியின் கவிதைகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன என்பதற்கு மௌனகுருவின் முயற்சிகள் பதச்சோறு. தொடர்ந்தும் பாரதியின் ஊற்றெடுக்கும் சிந்தனைகளை தமது கலைப்படைப்புகளில் பயன்படுத்திவருகிறார்.
மௌனகுருவின் மற்றும் ஒரு நாடகமான வனவாசத்திலும் துரியோதனன் சபையில் நடக்கும் சூதாட்டக்காட்சியிலும் பாரதியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து கவிதை வரிகளை எடுத்தாளவிருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது சக்தி பிறக்குது, காளிக்கூத்து நாட்டிய நாடகம் ஆகியனவற்றிலும் பாரதியின் வரிகள் இடம்பெறுகின்றன.
எண்பது வயதை நெருங்கும் இக்காலப்பகுதியிலும் அயர்ச்சியின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அரங்காற்றுகைகளிலும், சமகாலத்தில் இடம்பெற்றுவரும் இணையவெளி அரங்குகளிலும் மௌனகுரு பங்கேற்று வருகிறார். தொடர்ந்தும் முகநூல் வழியாக பல கட்டுரைகளை எழுதிவருகிறார்.
அவரது இந்த இயல்பு பலருக்கும் முன்மாதிரியானது. கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக நியமனமாகியிருக்கும் பேராசிரியர் மெளனகுரு அவர்கள், தொடர்ந்தும் கல்வி மற்றும் கலைத்துறை அரங்காற்றுககைளில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்துவார்.
![]()