கட்டுரைகள்

சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!…  விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!….  தொடர்- 15… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

ஷின்ஜிகு ஹோயன் தேசியப் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணம் ஐநூறு யென். நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்றதுமே பூத்துக் குலுங்கிய செர்ரி மரம் எங்களை வரவேற்றது. ஜப்பானில் செர்ரி ப்ளாசம் மற்றும் மவுண்ட் ப்யூஜியை பார்க்காமல் ஜப்பான் பயணம் நிறைவுறாது. நாங்கள் ஒஸாகாவில் பார்க்கமுடியாது போன செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குவதை ஷின்ஜிகு ஹோயன் தேசியப் பூங்காவில் பார்த்தோம்.

ஜப்பானில் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டுவரை நிலக்கிழார்களின் இருப்பிடமாக இருந்த இவ்விடம் தாவரவியல் பூங்காவாக மாறியது. இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிக்கப்பட்டது. அதன் இதை புதிதாக சீரமைத்து 1949 பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்காவது மாறியது. இந்த பூங்கா மூன்றுவகையான பூங்காக்களை உள்ளடக்கியது.

அதாவது பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாடுகளின் பூங்காவகைகளை உள்ளடக்கியது. இந்த பூங்காவின் மற்றொரு சிறப்பு அதிக எண்ணிக்கையில் செர்ரி மரங்கள் இருப்பதுடன் பன்னிரண்டு வகையான மரங்களை இங்கு பார்க்கலாம். குறிப்பாக மார்ச் ஏப்ரல் மாதங்களில் நானூறுக்கும் மேற்பட்ட சோமே யொஷினோ என்ற வகை செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்குவதை காணலாம்.

சிலமணி நேரங்களை அங்கு செலவிட்டபின்
மதிய உணவுக்காக ஒரு இந்திய உணவகத்தை தேடினோம். ரெப்போங்கி பல்பொருள் அங்காடி என்ற பெரிய வணிகவளாகத்தில் தியா என்ற உணவகத்தை தேடிக் கண்டுபிடித்தோம். சரவணபவா மற்றும அடையாறு ஆனந்தபவன் போன்று இல்லாவிட்டாலும் கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையாக வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை உள்ளடக்கிய கலவையாக இருந்தது. இருப்பினும் குறைசொல்ல முடியாத அளவுக்கு உணவு நன்றாகவே இருந்தது.

பின் அங்கிருந்து ஜப்பானின் பழமைவாய்ந்த உயிரியல் பூங்கா போகலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றோம். இந்த பூங்காவின் பெயர் யுனோ பார்க் ஆகும். இதற்கு ஷின்ஜிகு ஹோயன் தேசியப் பூங்காவுக்கு சுரங்கப் பாதை ரயில் மூலம் நாற்பது நிமிடங்களுக்குள் போய்விடலாம். ஆனால் ஒவ்வொரு இடத்தையும் ரயில் மூலம் சென்று பார்ப்பது செலவு மிகக் குறைவு என்றாலும் அதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும்.

ஆதலால் வாடகை வாகனம் மூலமே சென்றோம். இந்த யுனோ பார்க்கின் உள்ளேயே உயிரியல் பூங்காவும் உள்ளது. காலை 9.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை நேரம் இருந்தாலும் மாலை நான்கு மணிக்குமேல் உள்ளே செல்ல அனுமதியில்லை. திங்கட்கிழமை விடுமுறை.
இதற்குள் செல்ல 600 யென் கட்டணம். முதியவர்களுக்கு 300 யென் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இங்குள்ள உயரியல் பூங்காவை கிழக்கு பூங்கா மற்றும் மேற்கு மேற்கு பூங்கா என பிரித்து வைத்திருக்கிறார்கள். கிழக்கு பூங்காவில் பெரிய பாண்டா கரடிகள், ஆப்பிரிக்க யானை, புலிகள், போலார் கரடிகள், கொரில்லாக்கள் மற்றும் கடற்சிங்கம் போன்றவற்றைப் பார்க்கலாம். மேற்குப் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி, நீர் யானைகள் மற்றும் ஊர்வனவற்றின் காப்பகங்கள் உள்ளன.

மேலும் விழாக்காலங்களில் இந்த பூங்காக்களின் தோற்றமே மாறியிருக்கும். அப்படியொரு பண்டிகை நாட்களில் சென்றிருந்ததால் வழக்கத்துக்கும் மாறாக அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. எதைப்பார்ப்பது எதை விடுவது என்று நம்மை திக்கு முக்காடவைத்தது. இயற்கையாகவே அமைந்த தண்ணீர் தடாகத்தை பார்வையிடுவதா? அல்லது கியோமிஸு கண்ணொன்டோ கோவிலை பார்வயிடுவதா? என்று ஒன்றையொன்று மிஞ்சும் விதமிருந்தது.

கொஞ்சம் கியோமிஸு கண்ணொன்டோ கோவிலை பற்ற தெரிந்து கொள்வோமா? நம்ம ஊரில் அரசமரத்தை சுற்றி வருவதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் அந்த பலனுக்காக இங்கேயும் உள்ள சிறிய கோவில்தான். புதிர்போடாமல் பட்டென்று தேங்காய் உடைப்பதுபோல் சொல்லிவிடுகிறேன். இது குழந்தைப்பேறு வேண்டும் தம்பதிகள் வேண்டிக் கொள்ளும் இடமாகும்.

இந்தக்கோவில் கியோட்டோவிலுள்ள கியோமிஸுடேரா கோவிலைப்போன்றே உயர்வான இடத்தில் செந்தூர நிறமுகப்புடன் பாரம்பரிய முறையில் ஆணிகளைப் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கோவிலாகும். இந்த கோவிலுள்ள பெண்தெய்வம் கரு தரித்தல், சுகப்பிரசவம், நல்லமுறையில் குழந்தை வளர்த்தல் போன்றவற்றிற்காக வேண்டிக் கொண்டால் உதவும் தெய்வமாகும்.

மாடசாமி அண்ணாச்சி, இது இப்ப ரொம்ப அவசியம் இல்லையா? என்று கேட்பது என் மனக்கண்முன் தோன்றவே நானும் ஏதோ ப்ளோவில் வந்து விட்டதை உணர்ந்தேன். சரி, நல்லது கெட்டது நாலையும் நாமும் சொல்லவேண்டுமல்லவா? உலகில் எல்லா இடங்களிலும் எல்லா வழக்கங்களும் உள்ளதை தெரியப்படுத்தவே சொன்னேன்.

அடுத்ததாக இந்த பூங்காவில் உணவுத் திருவிழா என்று சொல்லுமளவுக்கு வரிசை வரிசையாக ஏகப்பட்ட உணவுக் கடைகள் போட்டிருந்தார்கள். விதவிதமான ஜப்பானிய சீன உணவு வகைகள் கண்களைக் கவர்ந்தன. உணவக் கடைகளை பார்வயிடுபவர்கள் மற்றும் உணவு உண்பவர்கள் என்று அந்த இடமே திருவிழாக் கூட்டமாக இருந்தது. இந்த இடங்களை எல்லாம் வழிகாட்டு உதவியின்றி தனிப்பட்ட முறையில் சுற்றிப்பார்த்தோம்.

ஆதலால் நாங்கள் தொலைந்து போய்விடாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். உல்லாசப் பயணம் வந்துவிட்டு ஒருவரை ஒருவர் தேடுவதில் நேரத்தை செலவு செய்ய முடியாதல்லவா? வழிகாட்டியுடன் வந்தவர்களைப் பார்த்தோம். அவர்களது கவனம் முழுவதும் உதவியாளர் ஏந்திச் செல்லும் கொடியில் மட்டுமே இருந்தது. சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல் சிறிது சிறிதே பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தனர்.

வழிகாட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் சுற்றிக் காண்பித்துவிட்டு அடுத்த குழுவை அழைத்து வரவேண்டும். அவரைக் குறை சொல்லமுடியாது. அவர் தொழில் அவருக்கு முதன்மையானது. நமக்கு வயது மூப்புகாரணமாக அவருடன் ஓடவும் முடியாது. அவர் சொல்வதை கேட்டுக் கொண்டே பார்க்க வேண்டியதைப் பார்க்கவேண்டும். ஆதலால் பெரும்பாலும் ஒரு இடத்துக்கு செல்லுமுன் நாமும் அந்த இடத்தை ஓரளவு அறிந்துகொண்டு சென்றால் பயனுடையதாய் இருக்கும்.

யுனோ பார்க்கிலும் செர்ரி மலர்கள் பூக்க ஆரம்பித்திருந்தன. ஷின்ஜிகு ஹோயன் தேசிய பூங்கா போன்று பூக்கள் பூத்துக் குலுங்கவில்லை. இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப் போல் அதையும் படம் எடுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் பல இடங்களை தேர்வு செய்து வைத்திருந்ததால் பார்க்க முடிந்தது.

யுனோ பூங்காவில் எங்களது பயணத்தை முடித்த கையோடு அறைக்கு திரும்பலாம். தங்கும் விடுதியருகிலேயே செவன் லெவனில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொதிகள் இருந்தன. ஆதலால் அங்கும் உணவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் இரவு உணவை மற்றொரு இந்திய உணவகத்தில் உண்ணலாம் என்று முடிவு செய்தோம்.

மினாட்டடோ – அஷாபுஜுபன் என்ற டோக்கியோவின் ஒரு பகுதியில் இருந்த மதர் இந்தியா என்ற உணவகத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றோம். அங்கு இரவு உணவை முடித்து தங்குமிடம் சென்றோம். ஒஸாகா திரும்ப வேண்டிய நாள் வந்தது. ஒஸாகாவிலிருந்து ஹிரோஷிமா செல்ல புல்லட் ட்ரெயினில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் அட்டவணைப்படி செல்ல வேண்டியிருந்தது.

(தொடரும்….)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *