நல்லூரில் திலீபனுக்கு வெண்கலச் சிலையா!; தமிழ் இனவாதிகளை அரசு ஊக்குவிக்கிறது; விமல் கொதிப்பு

தமிழ் இனவாத குழுக்களுக்கு எதிராக சட்டங்களை செயற்படுத்தாமல் தமிழ் இனவாதத்தை ஊக்குவிக்க அரசாங்கம் உதவுகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். நல்லூரில் தமிழீழ விடுதலைப் புலிகளை சேர்ந்த திலீபனின் வெண்கல சிலையை அமைத்து அதற்கு மலர் தூபி தீபமேற்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவரின் சிலையில் லெப்டிணன் கேணல் திலீபன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
லெப்டினன் கேணல் என்று குறிப்பிடுவதன் மூலம் அவர் ஆயுத பயங்கரவாதியே ஆகும். எமது நாட்டின் சட்டத்தின்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமாகும். அதனை ஊக்குவிக்கவோ, பிரசாரம் செய்யவோ முடியாது. ஆனால் அங்கு நடப்பது என்ன? சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றால் தமிழ் இனவாதக் குழுக்களுக்கு சட்டம் எந்த இடத்திலும் சரியாகப் பயன்படுவதில்லை, இது ஏன்? பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய மனிதர்களை சிறையில் அடைக்கவா சட்டம் உள்ளது? பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதை வளர்ப்பதற்கு இடம் கொடுக்கவா சட்டம் உள்ளது?
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி, அவர்களிடம் இருந்து கிடைத்த பணத்தின் அடிப்படையில் தான் வடக்கு மற்றும் கிழக்கு நிலப்பரப்பில் தமிழ் பிரிவினைவாத இனவாதத்திற்கு சுதந்திரமாகச் செயல்பட, சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட, சட்டத்தைக் புறக்கணித்துச் செயல்பட இன்று சுதந்திரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இனவாத விசப் பரப்புரை தமிழ் மக்களின் புதிய இளம் தலைமுறைக்கே ஊட்டப்பட்டு வருகிறது.
அங்கு, சீருடை அணிந்த பாடசாலை மாணவர்களை பாடசாலை ஆசிரியர்களுடன் இணைந்து அழைத்து வந்து திலீபனின் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
இவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது எப்படிச் சாத்தியமாகும்? பாடசாலை மாணவர்கள் ஏதேனும் ஒரு நிகழ்வில் பங்கேற்பதாக இருந்தால் அதிபரின் அனுமதி தேவை. சீருடையுடன் பங்கேற்பதற்கு அதிபரின் அனுமதி இல்லாமல் முடியாது. அப்படியானால், அரசாங்கத்தின் அணுசரணையோடும் அனுசரணைப் பலத்தோடும் தான் இந்தத் இனவாத, பிரிவினைவாத விசத்தை பரப்புவதற்கும், விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடைய நபர்களுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
எந்தவொரு இனவாதத்திற்கும் இனி இடமில்லை என்று ஜனாதிபதி எப்போதும் கூறி வருகிறார். ஆனால், தமிழ் இனவாதத்திற்குத் தவிர. வேறு எந்தவொரு இனவாதத்திற்கும் இடம் இல்லை என்றால், அது எத்தகைய இனவாதம்? அது ஜனாதிபதியின் இனவாதமா? தமிழ் தீவிரவாதப் பிரிவினைவாதத்திற்குச் சுதந்திரமாகச் செயல்பட இடமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் அர்ச்சுனா தனது பேஸ்புக் படமாக அநுரகுமாரவுக்கு ஆதரவளிக்கும் புகைப்படத்தையே வைத்திருந்துள்ளார். அவர் அப்போது நல்லவர். இப்போது எதிர்க்கட்சி மேடையில் ஏறும் போது புலி என்கின்றனர். ஆனால் அவரோ தான் மீண்டும் தமிழீழத்தை கேட்க மாட்டேன் என்றும் சிங்களவர்களுடன் மோத மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அவர் புலியென கூறி பொலிஸ் விசாரணைகளை நடத்துகின்றனர். ஆனால் திலீபனின் சிலையை அமைத்து சுதந்திரமாக அவரை நினைவுகூற இடமளிக்கின்றனர்.
இதேவேளை டயஸ்போராவினால் அநுரவின் தேர்தலுக்கு பணம் கொடுக்கப்பட்டது. வடக்கில், கிழக்கில் கிடைத்த வாக்குகள் நல்லிணக்கத்திற்காக கிடைத்தவையல்ல. அந்த வேலைகளுக்கு இடமளிப்பதாக கூறப்பட்ட இணக்கப்பாடுகளுக்கமைவே அது நடந்துள்ளன. இன்னும் பல வேலைகள் செய்வதற்கு உள்ளன. அதற்கு இடையூறாக நாங்கள் இருக்கின்றோம் என்பதற்காகவே 22ஆம் திருத்தம் மூலம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார்.
![]()