அனோஜனுக்கு மன்னிப்புக் கோர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவும்; விஜிதவிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

சமூகவலைத் தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றுக்காக சவூதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அல்லது அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் கலந்தாலோசித்து விபரங்களை கூறுவதாக அமைச்சர் விஜித ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் எம்.பி கூறுகையில்,
சவூதி அரேபியாவில் இலங்கையரான அனோஜன் என்பவர், முகப்புத்தகத்தில் வேறொருவர் பதிவிட்ட தவறான கருத்து ஒன்றுக்கு மாற்றுக் கருத்து தெரிவித்திருந்தார். அது இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கெதிராக அவருடைய குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தபோதும் , அந்நாட்டு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதை அறிந்ததுமே நான் அமைச்சர் விஜித ஹேரத்தைத் தொடர்புகொண்டு கலந்துரையாடினேன். நான் கூறும் வரையில் அவருக்கு இச்செய்தி தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், இன்றைக்கே (வெள்ளிக்கிழமை) சவூதி தூதரகத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு இது தொடர்பாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்வதாக வாக்குறுதியளித்தார்.
மேலும், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு அல்லது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு சவூதி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினேன்.
இது குறித்து வெளிவிவகார அமைச்சுடன் கலந்தாலோசித்து இது தொடர்பில் தெரிவிப்பதாக அமைச்சர் என்னிடம் தெரிவித்தார் என்றும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
![]()