இலங்கை

‘என் மகனைக் காப்பாற்றுங்கள்’; ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருமாறு, அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் அழுது புலம்பியவாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட ஃபேஸ்புக் கருத்து ஒன்றிற்காக, அனோஜன் என்பவருக்குச் சவுதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு உதவ இலங்கை சட்டரீதியான மற்றும் தூதரக ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் அதே வேளையில், சவுதி அரசாங்கத்திடம் கருணை கோரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரத் தொடக்கத்தில், அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடகச் சந்திப்பில் பேசிய அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, அனோஜனின் சார்பில் மேல்முறையீடு செய்வது குறித்து அவரது குடும்பத்தினருடன் அரசு ஆலோசித்து வருவதாகவும், அதேவேளையில் அரச மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு உள்ளிட்ட இராஜதந்திர வழிமுறைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *