சவூதியில் 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்கு மரணதண்டனை; அனோஜனின் குடும்பத்தினரின் மேல்முறையீடும் நிராகரிப்பு

சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட பதிவொன்றிற்காக, இலங்கை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் என்பவருக்கு சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.தனக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை(17) தங்கள் மகன் அனோஜன் தெரிவித்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தண்டனை விதிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் இம்மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தண்டனை நிறைவேற்றப்படும் ‘தமாம்’ சிறைச்சாலைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் தன்னை அழைத்துச் செல்லவுள்ளதாகவும் அனோஜன் தெரிவித்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவேற்றிய குற்றச்சாட்டில் சவூதியில் கைது செய்யப்பட்ட அனோஜன் சிவராஜாவுக்கு, கடந்த ஜூலை 27ஆம் திகதி சவூதி நீதிமன்றத்தால் முதற்கட்டமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்சம் சவூதி ரியால் (இலங்கை ரூபாவில் 26 கோடியே 81 லட்சத்து 72 ஆயிரத்து 437.71) அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தக் கருத்துத் தொடர்பில் கடந்த ஜூன் 30ஆம் திகதி சவூதியில் கைது செய்யப்பட்ட அனோஜன், ஜூலை 07ஆம் திகதி சவூதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ஜூலை 27ஆம் திகதி சவூதி நேரப்படி காலை 9 மணிக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக அனோஜன் தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
நீதிமன்றத்தில் தான் ஆங்கிலத்தில் பேச முடியும் என அனோஜன் குறிப்பிட்டபோதிலும், அரபு மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அனோஜன் கூறிய விஷயங்கள் திரிபுபடுத்தப்பட்டு வேறு விதமாக மாற்றிக் கூறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
முகநூலில் சுயாதீனமாக இவரால் பதிவு இடப்படவில்லை என்றும், வேறொருவருடனான உரையாடலின் போதே இது நிகழ்ந்துள்ளது என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இந்து மதம் சார்ந்த சிவலிங்கம் குறித்து அந்த நபர் இழிவான கருத்தைப் பரிமாறியதால், அதே கருத்தில் இருந்த பெயருக்குப் பதிலாக நபிகள் நாயகத்தின் பெயரை மாற்றி அனோஜன் பின்னூட்டப் பகுதியில் (Comment) பதிவிட்டதாகச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். இந்தத் தவறான பதிவிற்கு குறித்த முகநூல் கணக்கின் உரிமையாளரே தூண்டுதலாக இருந்தார் என்றும் அனோஜனின் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
சவூதி அரேபிய சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் அதை மீளாய்வு செய்ய முடியும் என்பதால், அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டனர். இலங்கை பிரதி வெளிநாட்டு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவைச் சந்தித்த பிறகு வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அவர்கள் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டச் செலவுகளுக்காகக் கோரப்பட்ட 1,890,766 ரூபா தொகையை, வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் வெளிநாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட ஆவணங்களின்படி, 2026 ஆகஸ்ட் 24 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குடும்பத்தினர் முன்னதாகவே மேல்முறையீடு செய்யுமாறு கோரியிருந்த நிலையில், அமைச்சினால் அந்த மேல்முறையீட்டு ஆவணம் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் 2026 செப்டம்பர் 16 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுவில் ‘அட்லான் அப்துல்லா அல்-சுபை’ என்பவர் சட்டத்தரணியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தில் உண்மையில் வேறொரு சட்டத்தரணியே முன்னிலையாகியுள்ளார் எனப் பெற்றோர் கூறுகின்றனர். அந்தச் சட்டத்தரணியின் பெயர் அல்லது தொடர்பு விபரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையின் போது தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அனோஜன்,தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், 30 நாட்களுக்குள் இம்மரண தண்டனையை நிறைவேற்றப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், தண்டனை நிறைவேற்றப்படும் ‘தமாம்’ சிறைச்சாலைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் தன்னை அழைத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை காலை தெரிவித்தனர்
![]()