உலகம்

சுவீடன் நாட்டு எம்.பி.யாக இந்திய வம்சாவளி பெண் தேர்வு

சுவீடனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஸ்டாக்ஹோம் சிட்டி தொகுதியில் பசுமைக்கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிலா விகே பாட்டீல் (41) வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மராட்டியத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளர் அசோக் விகே பாட்டீலின் மகளான நிலா விகே பாட்டீல், மராட்டியத்தின் முக்கிய அரசியல் மற்றும் கூட்டுறவுத் துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆசியாவின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிறுவிய விதல்ராவ் விகே பாட்டீலின் கொள்ளுப் பேத்தியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலசாகேப் விகே பாட்டீலின் பேத்தியும் ஆவார். மேலும், தற்போதைய பா.ஜனதா அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் அண்ணன் மகளும் ஆவார்.

சுவீடனில் பிறந்த நிலா, தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை மராட்டிய மாநிலம் அகமதுநகரில் கழித்துள்ளார். சுவீடனில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ள அவர், கடந்த 25 ஆண்டுகளாக அந்நாட்டின் பசுமைக்கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்னர், முன்னாள் சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தலைமையிலான அரசில் நிதி மற்றும் வீட்டுவசதி துறைகளுக்கான அரசியல் ஆலோசகராகவும் நிலா விகே பாட்டீல் பணியாற்றியுள்ளார்.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த நிலா, 349 உறுப்பினர்களைக் கொண்ட சுவீடன் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது 15 வயதில் மராட்டிய மாநில பட்ஜெட்டை படிக்கச் செய்த தனது தாத்தா பாலசாகேப் விகே பாட்டீல் உயிருடன் இருந்திருந்தால், தனது வெற்றியைப் பார்த்து பெருமைப்பட்டிருப்பார் என்றும் கூறினார்.

“இந்தியாவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவீடன் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 176 இடங்களைப் பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மராட்டிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *