முச்சந்தி

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை ! …. றிஷாட்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் தொடர்புபடுத்தும் வகையில் அண்மையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், தாம் ஏற்கனவே ஏழு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தினால் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் சில ஊடகங்களில் தம்மையும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குற்றவாளியாகக் குறிப்பிடப்படும் சஹ்ரான் ஹாஷிமையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருவதாகவும், அவை சமூக ஊடகங்களிலும் பரவியுள்ளதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதனால் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், உண்மை நிலை குறித்து தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இலங்கை முஸ்லிம் சமூகத்தையும் பாரியளவில் பாதித்ததாகத் தெரிவித்த றிஷாட் பதியுதீன், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாத நடவடிக்கைக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வலியுறுத்தினார்.

தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் வர்த்தகர்கள், வைத்தியர்கள், அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகமும் அதன் பல்வேறு அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தாமும் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட றிஷாட் பதியுதீன், தமது தொலைபேசிகள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஏழு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைகளின் பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக தம்மை விடுவிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும், பின்னர் நீதிமன்றத்தினால் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அண்மையில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சில விடயங்கள் ஊடகங்களில் வேறு விதமாக செய்தியாக்கப்பட்டுள்ளதாக றிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் மேலதிக அறிக்கையில் இடம்பெற்றிருந்ததாகவும், அது நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டதை சில ஊடகங்கள் தம்மை மீண்டும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தகர் அலாவுதீனுடனான தமது தொடர்பை அடிப்படையாகக் கொண்டு சஹ்ரானுடன் தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General நீதிமன்றத்தில் தெரிவித்ததாக வெளியாகிய செய்தியையும் அவர் மறுத்தார்.

“அவர் அவ்வாறு கூறவில்லை. அவரது முழுமையான விளக்கத்தை நான் பார்த்துள்ளேன். என்னைப் பற்றிக் கூறப்படும் விடயம் வேறு” என றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தம்மை மீண்டும் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தும் முயற்சியின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது குறித்து ஊகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, பாராளுமன்றத் தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது விசேட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

உண்மையான குற்றவாளிகள் மற்றும் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தவர்கள் சட்டரீதியான விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும் என்பதுடன், எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் எஸ். அனோஜன் தொடர்பிலும் றிஷாட் பதியுதீன் இதன்போது கருத்து தெரிவித்தார். அனோஜனின் குடும்பத்தினரை தாம் நேரில் சந்தித்துப் பேசியதாகவும், அவரது தாயார் தனது மகனை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தம்முடன் தொடர்புகொண்டு ஆலோசித்துள்ளதாகவும், இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் அனோஜனின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் கலந்துரையாடி, ஜனாதிபதியின் ஊடாகவும் சவூதி தூதரகத்தின் ஊடாகவும் சவூதி அரசாங்கத்திடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை பல இனங்களும் பல மதங்களும் வாழும் நாடு எனக் குறிப்பிட்ட அவர், அனைவரும் சமமாக வாழக்கூடிய சட்டப்பூர்வ சூழல் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் மக்களுக்காக மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆதரவு வழங்குவோம் எனவும், அரசாங்கம் தனது கடமைகளில் தவறும் சந்தர்ப்பங்களில் மக்களுக்காக குரல் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுடன், அதேவேளை குற்றமற்ற எந்தவொரு நபரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படக்கூடாது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நீதித்துறை நியாயமாகவும் சுயாதீனமாகவும் செயற்பட வேண்டும் என்பதுடன், தற்போதைய விசாரணைகளின் மூலம் உண்மையான நிலை வெளிக்கொணரப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *