தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்!

இந்தியாவின் சென்னை தாம்பரம் அரச தலைமை வைத்தியசாலைக்கு 108, ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதிலிருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் கையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் விறுவிறுவென உள்ளே ஓடினார். அந்த டப்பாவில் பாம்பு ஒன்று இருந்ததை பார்த்ததும் வைத்தியசாலையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பாம்புதான் என்னைக் கடித்தது என்று கூறி அவர் சிகிச்சைக்காக உள்ளே சென்றார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் குன்றத்தூர் கிருகம்பாக்கம் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மையூர் சாகீக் (36) என்பது தெரியவந்தது.
மர பலகையின் அடியில் பதுங்கியிருந்த சிறிய பாம்பு அவரது கையை கடித்துள்ளது. பதறிப்போன அவர் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்து, கடித்த பாம்பையும் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக்கொண்டு தாம்பரம் அரச வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
பாம்புடன் ஒருவர் சிகிச்சைக்கு வந்த சம்பவம் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அந்த பாம்பைப் பார்த்த வைத்தியர்கள் அது விஷமில்லாத சிறிய தண்ணீர் பாம்புதான், பயப்படத் தேவையில்லை என்று கூறி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
![]()