உலகம்

“ஈரானுக்காக உயிரைத் தியாகம் செய்வோம்!” – வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள்

ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு ஆதரவாகவும் எதிரிகளுக்கு எதிராகவும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தத் தயார் என உறுதியேற்றுள்ள இந்த நடவடிக்கை, கடந்த பெப்ரவரி மாதத் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய பேரணியாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மற்றும் புதிய பொருளாதாரத் தடைகளால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சரிவடைந்து வரும் சூழலில், மக்களை ஒன்றிணைக்கவும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தவும் ஈரான் அரசு இந்த பேரணியை முன்னெடுத்துள்ளது.

“ஜான்படாய்-ஏ ஈரான்” (ஈரானுக்காக உயிரைத் தியாகம் செய்பவர்கள்) என்ற திட்டத்தின் கீழ், இராணுவப் பயிற்சி பெற்று நாட்டைப் பாதுகாக்க லட்சக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர்.

தெஹ்ரான் நகரின் மையப்பகுதியில் சீருடை அணிந்து, தேசியக் கொடிகளை ஏந்தியவாறு இவர்கள் அணிவகுத்துச் செல்ல, பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர்.

துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடிப்படை இராணுவப் பயிற்சிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அரசு ஊடகங்கள், கடந்த சில நாட்களாக மக்களை இத்திட்டத்தில் இணையுமாறு ஊக்குவித்து வருகின்றன.

இப் புதிய தன்னார்வலர்கள், ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) மற்றும் அதன் ‘பசிஜ்’ (Basij) அமைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு அரணாகச் செயற்படுவர்.

இத்திட்டத்தில் பங்கேற்க 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பதிந்துள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெஹ்ரான் காவல் படையின் தளபதி ஜெனரல் ஹசன் ஹசான்சாதே தெரிவித்தார்.

இன்று காலை நிலவரப்படி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தெஹ்ரான் வீதிகளில் திரண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரணியில் கலந்துகொண்ட சிலர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை மிதித்தும், “அமெரிக்காவுக்கு வீழ்ச்சி”, “இஸ்ரேலுக்கு வீழ்ச்சி” என முழக்கமிட்டும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அதேவேளை, தனது இராணுவ பலத்தைக் காட்டும் வாய்ப்பாகவும் ஈரான் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

விமான எதிர்ப்புப் படைகள், லாரிகளில் பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கிகளுடன் கலந்துகொண்ட பெண் புரட்சிகரக் காவல் படையினர் எனப் பலரும் காட்சிப்படுத்தப்பட்டனர்.

மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களையும் புரட்சிகரக் காவல் படை காட்சிப்படுத்தியது.

போர் தொடங்கியதிலிருந்து ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி வருவதால், வளைகுடாப் பகுதியிலிருந்து உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *