எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க விண்வெளியில் ஆயுதங்களை திரட்டும் அமெரிக்கா

எதிரிகளின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக விண்வெளியிலும் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எதிர்கால போர்கள் விண்வெளியை மையமாகக் கொண்டு நடைபெறக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அமெரிக்கா கடந்த 2019ஆம் ஆண்டு விண்வெளிப் படையை உருவாக்கியது. இதேபோன்று ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளிப் படைகளை உருவாக்கியுள்ளன.
மேரிலேண்ட் மாகாணத்தின் நேஷனல் ஹார்பர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமெரிக்க விமானப்படை செயலாளர் டிராய் மெய்ங்க், விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை எதிர்கொள்ள அமெரிக்க விண்வெளிப் படை சார்பில் விண்வெளியில் ஆயுதங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்க விண்வெளிப் படையின் ஓய்வுபெற்ற கர்னல் சார்லஸ் கால்பிரெத், அமெரிக்கா – ஈரான் மோதலில் ஈரானுக்கு சீனா மறைமுகமாக உதவி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க விமானப்படைத் தளங்கள் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தகவல்களை சீனா ஈரான் இராணுவத்துக்கு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிரிகளின் செயற்கைக்கோள்களை லேசர் மற்றும் ஜாமர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்ய அமெரிக்க விண்வெளிப் படை நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் கால்பிரெத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விண்வெளியை போர்க்களமாக மாற்றக்கூடாது என்றும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் விண்வெளியில் ஆயுதக் குவிப்புக்கு வழிவகுக்கும் என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் எந்தவொரு ஆயுதமும் நிலைநிறுத்தப்படக்கூடாது என்றும், இது தொடர்பாக சர்வதேச நாடுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த ரஷ்யா முயற்சித்து வருவதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், செயற்கைக்கோள்களை செயலிழக்கச் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்துள்ள நிலையில், இதன் எதிர்விளைவாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளியில் ஆயுதங்களை குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
![]()