இலங்கை

“சமஷ்டி கோருபவர்களுக்கே அர்ச்சுனாவின் உரை வலிக்கிறது”

சமஷ்டி கோருபவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் அனுராதபுர உரை வலியை ஏற்படுத்தும் என்றும், கருணா மற்றும் பிள்ளையானை மஹிந்த ராஜபக்ச ஜனநாயக வழிக்குக் கொண்டுவந்தது போல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச திருத்தியுள்ளார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை அர்ச்சுனா எம்.பி. ஊக்குவிக்கின்றார் என்றால், அது அவருக்கும் நல்லதல்ல. ஏனெனில், நாட்டுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யமாட்டோம் எனச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டே அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கின்றோம்.

வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைப்பது குறித்தே அர்ச்சுனா எமது மேடையில் பேசினார். எனவே, சமஷ்டி கோருபவர்களுக்கு அர்ச்சுனாவின் உரை நிச்சயம் வலியை ஏற்படுத்தவே செய்யும்.

அன்று கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரை மஹிந்த ராஜபக்ச ஜனநாயக வழிக்குத் திருத்தினார்; அவர்கள் கிழக்கைப் பிரித்துத் தருமாறு கேட்கவில்லை.
அதுபோல, அர்ச்சுனா எம்.பி. நாடாளுமன்றத்திற்கு வரும்போது வேறு நிலைப்பாட்டில் இருந்திருக்கலாம். ஆனால், தற்போது அவரை நாமல் ராஜபக்ஷ நல்வழிப்படுத்தியுள்ளார். இது நாமல் ராஜபக்சவுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்று இந்திக அனுருத்த தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *