இலங்கைக்கு சுற்றுலா வந்தவருக்கு வந்த ‘பேட்மேன்‘

இலங்கைக்குச் சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாக வௌவால் ஒன்று வந்து உடலில் ஒட்டிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. சாலையோரம் நின்றுகொண்டிருந்த அவரின் மீது திடீரென வௌவால் வந்து விழுந்துள்ளது. அதன்பிறகு அந்த வௌவால் அவரை விட்டு விலகாமல் உடலில் ஒட்டிக்கொண்டதால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பயணி சில நொடிகள் அப்படியே நின்றுள்ளார். அருகில் இருந்த மற்றொருவரும் அவருக்கு உதவ முயன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
வௌவால் திடீரென வந்து விழுந்தபோதும், அந்தப் பயணி பதற்றத்தில் ஓடாமல் அமைதியாக நின்றுள்ளார். அவரது முகத்தில் அதிர்ச்சியும் குழப்பமும் தெரிந்த நிலையில், வௌவால் தொடர்ந்து அவருடன் இருந்துள்ளது. இதனைக் பார்த்த அருகிலிருந்தவர்கள் என்ன செய்வது என யோசித்தபடி நின்றுள்ளனர். எதிர்பாராத இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவர்கள், “இலங்கைக்குச் சென்றால்… பேட்மேன் உங்கள் மீது விழுந்தால்” என்ற நகைச்சுவையான வாசகத்தையும் பதிவிட்டுள்ளனர். இதனால் வௌவாலை ‘பேட்மேன்’ கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுப் பலரும் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். பயணி காட்டிய அமைதியான அணுகுமுறையும் சமூக வலைதளப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, வௌவால் உடலில் இருந்தபோதும் அவர் பதற்றப்படாமல் நின்றதைப்ப பலரும் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவிற்குப் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
ஒருவர், “நீங்கள்தான் அதற்குப் பிடித்தவர் போல” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இலங்கையில் யானைகளை எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் வௌவால் வந்துவிட்டதே” என நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
எதிர்பாராத வனவிலங்குச் சந்திப்பாக அமைந்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
![]()