ரிஷாத்துக்கும் சஹ்ரானுக்கும் நெருங்கிய தொடர்பு – நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட சாட்சியம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் சுரேஷ் சலே உள்ளிட்ட தரப்பினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து மேலும் 2 சிறப்புக் சாட்சியங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றில் ஒரு சாட்சியம், அப்போதைய இராணுவ உளவுத்துறையின் தகவல் வழங்குநர் ஒருவரால் வழங்கப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அரசியல் பாதுகாப்பின் கீழ் பல சந்தர்ப்பங்களில் சஹ்ரான் ஹாசீம் மன்னார் கடல் வழியாக இந்தியா சென்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்
அரச சேவையில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவிற்கு வெளிநாட்டு பயணத் தடையையும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்த வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
சந்தேகநபரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, விசாரணைகளின் முன்னேற்றம் எனக் கூறி சமர்ப்பிக்கப்படும் பி அறிக்கைகள் பொய்யான கூற்றுகள் என தெரிவித்தார்.
இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
![]()