இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுக்கல்லை அகற்றிய அதிகாரிகள்?; மக்கள் அதிருப்தி

முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு–முல்லைத்தீவு A35 பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழினப்படுகொலையின் நினைவுச் சின்னமாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு வளாகத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் நோக்கில் குறித்த நினைவுக்கல் கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அமைத்து திறந்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, குறித்த நினைவுக்கல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், நினைவுக்கல்லின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டிருந்த மனித உருவம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், குறித்த நினைவுக்கல்லை முழுமையாக அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களால் நினைவுக்கல் அகற்றப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

நினைவுக்கல் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டிய பொறுப்பு அரச நிறுவனங்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகார சபை தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் நினைவுகளை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணைபோகிறதா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

 

வட்டுவாகல் பாலம் புனரமைப்பு பணிகளின்போதும் பழைய பாலத்தின் ஒரு பகுதியையாவது பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பழைய பாலத்தைப் பாதுகாத்து புதிய பாலத்தை அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அந்தக் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதனிடையே, அரச திணைக்களங்கள் ஊடாக தமிழ் மக்களின் உணர்வுகள் மற்றும் வரலாற்று நினைவுகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாமல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால், A35 வீதியின் வட்டுவாகல் பகுதியில் இராணுவ முகாமுக்குச் செல்லும் வீதியை அடையாளப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை, முள்ளிவாய்க்கால் சந்தியில் இராணுவ முகாமுக்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகை, திம்பிலி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவப் பண்ணையை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை உள்ளிட்டவற்றையும் அகற்ற முடியுமா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

மேலும், தேராவில் தேக்கங்காட்டுப் பகுதியில் வீதி எல்லையில் அமைக்கப்பட்டுள்ள தேநீர்க்கடை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

அதேபோன்று, கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகிலுள்ள சந்திரன் பூங்கா வளாகத்தில் இராணுவத்தால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் கல்லை அகற்ற முடியாமல், நடைபாதையை சிறிதாக்கி வீதி அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளுடன் விளையாடாமல், அனைத்து தரப்பினரினதும் உணர்வுகளையும் மதித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *