எம்.பி.க்களை மிரட்டி பணம் பறிக்கும் குழு; என்னிடம் 1 மில்லியன் ரூபா கேட்டனர்

நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வழக்குகளைத் தீர்த்து வைப்பதாகக் கூறி சிலர் அவர்களைப் பயமுறுத்திப் பணம் பறிக்கும் (blackmail) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றம் சாட்டினார்.
“ஊடகச் செயற்பாட்டாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்காவிட்டால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வழங்குவோம் என்று மிரட்டுகின்றனர்” என அந்த எம்பி ‘டெய்லி மிரர்’ நாளிதழுக்குத் தெரிவித்தார்.
“அப்படிப்பட்ட ஒருவர் என்னிடம் 1 மில்லியன் ரூபா கோரியதுடன், 15 ஆண்டுகளுக்கு முன் நான் ஈடுபட்ட நில விற்பனை குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளிப்படுத்துவேன் என்றும் மிரட்டினார். எனக்குச் சொந்தமான நிலத்தை நான் விற்பனை செய்தேன், வாங்கியவர்கள் எனது வங்கிச் கணக்கில் பணத்தை வைப்பு செய்தனர். ஆனால், இந்தப் போலி செயற்பாட்டாளர், நான் நிலத்தை அதிக விலைக்கு விற்றதாகக் கூறுமாறு நிலத்தை வாங்கியவரிடம் கூறி, அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அந்த நில விற்பனை சட்டப்பூர்வமானது, ஆனால் அந்த நபர் ஏற்கனவே நான் சட்டவிரோத நில ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக ஒரு கதையைப் பரப்பியுள்ளார். என்னைப் பற்றிய இந்த பொய்க் கதையைப் பரப்புவதை நிறுத்த அவர் 1 மில்லியன் ரூபா கோரினார்,” என்று அவர் மேலும் கூறினார்.
![]()