இலங்கை

10 மில்.ரூபா மோசடி சிக்குவாரா ஷிரந்தி; திடீரென வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.ரி. ஸ்கேனர் பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கிற்கு ரூ. 10 மில்லியன் நிதி மாற்றப்பட்டமை தொடர்பில், ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட ‘சிரிலிய சவிய’ அமைப்பின் மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைக் கணக்குகளுக்கு, எழுத்துப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த சி.ரி. ஸ்கேனர் கருவி சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியன் நிதி, குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படாமல் வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அந்த நிதியின் தற்போதைய நிலை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கியின் அதிகாரிகள் மற்றும் குறித்த காலத்தில் பணியாற்றிய பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பில் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிரந்தி ராஜபக்ச தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகாவும். கைது செய்யப்படப் போவதை அறிந்தால் அனைவருக்கும் நோய் வந்து விடுகின்றது என்றும் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *