இலங்கை

பௌத்த அடையாளங்களுக்கு வடக்கில் ஆபத்து: பதறுகிறார் விமல்

வடக்கிலுள்ள பௌத்த தொல்லியல் இடங்கள் இந்து மயமாக்கப்பட்டு வருவதாகவும், தெற்கில் சிங்களத் தலைவர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலம்பெயர் அமைப்புகளுக்கு உறுதியளிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலே அநுரவிடம் உள்ளது. மகாவலி அதிகாரசபையைக் கலைப்பது அதில் ஒன்றாகும். அவ்வாறு செய்தால் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகள் அனைத்தும் பிரதேச செயலகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும்.

அத்துடன், தொல்லியல் சட்டத்திற்குப் பதிலாக தேசிய உரிமைகள் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதன் மூலம் தொல்லியல் சார்ந்த அதிகாரங்கள் மாகாண சபைகளின் கீழ் சென்றுவிடும்.

தற்போது வடக்கில் பௌத்த தொல்லியல் இடங்கள் இந்துமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொல்லியல் அதிகாரங்கள் மாகாண சபைகளின் வசம் சென்றால் என்னவாகும்? நாட்டின் வரலாறே மாற்றி எழுதப்படக்கூடும்.

மகிந்த ராஜபக்சவின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகவே நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகும். தற்போது ஷிரந்தி ராஜபக்சவையும் பழிவாங்கப் பார்க்கின்றனர். அநுரவுக்கு வாக்களித்த 68 லட்சம் மக்கள் அல்ல, தமிழ் டயஸ்போராக்களே இவ்வாறான நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடைகின்றன,” என்று தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *