இலங்கை

செம்மணிக்கான நீதி விசாரணைகளை வலியுறுத்தி இன்றும் யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்றும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.

பேரணிக்கு ஆதரவு 

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *