இலங்கை

பலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான நிலம்  உள்ள நிலையில் மேலதிகமாக தனியார் காணிகள் ஏன்?; சாணக்கியன்கேள்வி

பலாலி விமான நிலைய ஓடுபாதையை சீரமைத்தல் ,முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், மேலதிக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த திட்டமிடுகின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன்   கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  நிலையியல் கட்டளை  27/2 இல் விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் இணைப்புத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது. காங்கேசன்துறை துறைமுகத்திற்காக இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தொடர்ந்தும் தெளிவற்ற  நிலை உள்ளது.

இந்தத் திட்டங்கள் குறித்து அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என்றும், அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மையளிப்பதாக அமைய வேண்டும் என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் தெரிவித்துள்ளார். அவர் துறைமுகங்கள் அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சராக தற்போது பதவி வகிக்காத நிலையில், எந்த அடிப்படையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இது அரசாங்கத்தின் நிலைப்பாடா?.

பலாலி மற்றும் காங்கேசன்துறை அபிவிருத்திகள் இணைப்புத்தன்மை, சுற்றுலா,வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நேரடிப் பலன்களை அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இத்திட்டங்கள் மக்களுக்கு போதுமான பலனைத் தராது என தீர்மானிப்பதற்கு அரசாங்கத்தால் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது?.

யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள், மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள், வருமான கணிப்புகள் அல்லது செலவு, பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

சுற்றுலா, முதலீடு மற்றும் புலம்பெயர் மக்களின் இணைப்புத்தன்மையைக் சுட்டிக்காட்டி, லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளுக்கான யோசனையை  பிரித்தானிய பாராளுமன்ற  உறுப்பினர் காரெத் தோமஸ் முன்வைத்துள்ளார். இந்தப் பிரேரணை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம், விமான நிறுவனங்கள் அல்லது விமான நிலைய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின், பலாலியில் இத்தகைய சேவைகளை சாத்தியமாக்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் யாவை? அதற்கான கால அவகாசம் என்ன?.

ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், தற்போது மேலதிகமாக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த திட்டமிடுகின்றது. பலாலி, மலியிட்டி, வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை   விடுவிக்காமல், ஓடு பாதை அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு  பொது மக்களின் காணிகயை ஏன்  கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், திருகோணமலை துறைமுகம் மற்றும் தலைமன்னார் – இராமேஸ்வரம் படகு சேவை தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் என்ன? இவை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள், நிதி ஏற்பாடுகள்,பங்குதாரர் கலந்துரையாடல்கள் அல்லது கால அவகாசம் எதுவும் வழங்கப்பட்டுள்ளதா?

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஊருக்காகவே மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தார். அதனால் எவ்வித பயனும் நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மையே.   பலாலி விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிட முடியாது. பலாலி விமான நிலையம் வணிக விமான நிலையமாகவும் பயணிகள் விமான நிலையமாகவும் காணப்படுகிறது. ஆகவே  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்தை ஏற்க முடியாது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  வெளிநாடு ஒன்றினால் 62 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை கொண்டு எவ்வாறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த வாரம்  துறைமுக அமைச்சில்  அபிவிருத்தி பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே  இந்த அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அரசாங்கம்  வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட  வேண்டியது அவசியம்  என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *