செப் . 24 இல் சபையில் விவாதத்துக்கு வருகிறது” 22”

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 24 திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் 24ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம் செப்டம்பர் 25ஆம் திகதி இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயர்நீதிமன்றங்களின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தில் 80 வரையிலான மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன .இம்மனுக்கள் மீதான விசாரணைகளை முடித்த உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பவுள்ளது .இந்நிலையிலேயே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
![]()