இலங்கை

’22” ஊடாக ”ஒரு கட்சி” நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சி மக்களை அணிதிரட்டி எதிர்ப்போம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த திருத்தமானது நீதித்துறை சுயாதீனத்தின் மீதான மரண அடியாகும். நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும், மக்களின் மனித உரிமைகளை மீறும் மிகவும் கடுமையான ஜனநாயக விரோத செயற்பாடாகவே இது இருக்கின்றது.

22ஆவது திருத்தத்தை கொண்டுவருவதன் ஊடாக இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் தீருமா? பொருட்களின் விலைகள் குறையுமா? பொருளாதார அபிவிருத்திகள் நடக்காத பிரச்சினைகள் தீருமா? வறுமை அதிகரிப்பு மற்றும் தொழில் இன்மை அதிகரிப்பது தீருமா? இதன்மூலம் இந்த நாட்டு மக்களின் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுமா?
உண்மையில் அவை நடக்காது.

ஒன்றே ஒன்றுதான் நடக்கும். நாட்டில் ஒரு கட்சி ஆட்சியே உருவாகும். ஒரே கட்சி நாட்டை ஆளும், அரச துறையை கட்டுப்படுத்தும் தனிக் கட்சி ஆட்சியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையே இதுவாகும். இதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிப்பதுடன், இதனை எதிர்ப்போம். இதற்காக நாட்டு மக்களை அணிதிரட்டுவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *