பலதும் பத்தும்

256வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

தமிழகம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதில் சேலம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் கே. பத்மராஜன் தனது வேட்புமனுவை முதலாளாகத் தாக்கல் செய்தார்.

தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது.

வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான அன்று, 65 வயதான பத்மராஜன் தனக்கு உகந்த நேரமாகக் கருதி காலை 11.05 மணிக்குத் தனது மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன்:

“நான் 1988ஆம் ஆண்டு எனது தேர்தல் பயணத்தைத் தொடங்கினேன். இதுவரை 255 தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். இது எனது 256வது வேட்புமனுவாகும்.

கின்னஸ் உலக சாதனை, லிம்கா சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் டெல்லி சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் இடம்பெறுவதே எனது ஒரே இலக்காகும்.

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. தொடர் முயற்சியின் மூலம் உலக சாதனை படைப்பதே எனது நோக்கம்” எனத் தெரிவித்தார்.

தாராபுரம் தனித்தொகுதி என்பதால், பத்மராஜன் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 16 வரை நடைபெறவுள்ளதுடன், செப்டம்பர் 17 அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, செப்டம்பர் 19 வேட்புமனுக்களைத் திரும்பப்பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் நடத்தை விதிகளை உறுதிப்படுத்தப் பறக்கும் படைகள் மூலம் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *