புலம்பெயர் நாடுகளில் தமிழ் நூல்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டியது அவசியம்!… பாரிஸ் நூல் வெளியீட்டில் கே. பி. லோகதாஸ் உரை

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கு தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பது அவசியம் என பாரிசில் இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளருமான கே. பி. லோகதாஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்களின் வெளியீட்டு விழா செப்டெம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர்.
நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய கே. பி. லோகதாஸ் தனது உரையில், தமிழில் வெளிவரும் சிறந்த இலக்கிய, வரலாற்று, அரசியல் மற்றும் ஆய்வு நூல்கள் தமிழர்களிடையே மட்டுமன்றி, புலம்பெயர் சமூகங்கள் வாழும் நாடுகளிலும் பரவலாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ் நூல்களை ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறு, பண்பாடு, இலக்கியச் செழுமை மற்றும் சமூக அனுபவங்களை உலகளாவிய வாசகர்களிடம் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் வளர்ந்து வரும் தமிழ் இளைய தலைமுறையினர் தமது மொழி மற்றும் வரலாற்றுடன் தொடர்பைத் தொடர்ந்து பேணுவதற்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், கல்வியாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நூல் வெளியீட்டு விழாவின் ஒருங்கிணைப்பாளராக திருமதி நிசாந்தி அகில் செயற்பட்டார். திரு. அருள்மாறன் அறிமுக உரையை நிகழ்த்தினார். ஈழப் போரில் எழுத்தாயுதம் நூலாய்வை கவிஞர் ஈழபாரதியும், உக்ரேனிய போரும் ஊடகத் திரிபும் நூலாய்வை திரு. சிவா சின்னப்பொடியின் உரையை திரு. லிங்கமும், போர்க் களத்தின் பேனாக்கள் நூல் குறித்து திரு. விவேகானந்தனூர் சதீஸும், அரபு வசந்தம் நூல் குறித்து திரு. வாசுதேவனும் ஆய்வுரைகளை வழங்கினர்.

மேலும், இந்நிகழ்வில் திரு. முகுந்தன், திரு. எஸ். கே. ராஜன், திரு. துரைசிங்கம் மற்றும் ஆசிரியர் பிரியா லவன் ஆகியோர் சிறப்பு உரைகளை நிகழ்த்தினர். அத்துடன் நன்றியுரையை செல்வி. கல்கி தசரதன், செல்வி.கயல் நிரோஜன் வழங்கினர். இந்நிகழ்வின் நிறைவாக நூலாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா ஏற்புரையாற்றினார். நான்கு நூல்களின் உருவாக்கப் பின்னணி, அவற்றை எழுதுவதற்கான காரணங்கள், ஆய்வுப் பரப்பு மற்றும் அவை முன்வைக்கும் சிந்தனைகள் குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் இலக்கியப் பரப்பில் சமகால அரசியல், வரலாறு மற்றும் சர்வதேச நிகழ்வுகள் தொடர்பான பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்நான்கு நூல்களும் வெவ்வேறு களங்களை இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளன. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் இலக்கியச் செயற்பாடுகள் விரிவடைந்து வரும் நிலையில், பாரிஸில் நடைபெற்ற இந்நான்கு நூல்களின் வெளியீட்டு விழா, தமிழ் இலக்கியத்தையும் சமகால அரசியல்–வரலாற்றுச் சிந்தனைகளையும் இணைக்கும் முக்கியமான இலக்கியச் சந்திப்பாக அமைந்தது.

பாரிஸ் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
![]()