பலதும் பத்தும்

இந்த உணவுப்பழக்கங்களை தவிர்ப்பது நல்லது!

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். ஆனால், அந்த சிரசு உள்பட உடல் உறுப்புகள் அனைத்துக்கும் தேவையான சக்தியை உற்பத்தி செய்து கொடுப்பது வயிறுதான். எனவே, வயிற்றின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வயிற்றுக்குத் தேவையான உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் கொடுக்காமல் போனால் உடல் தானாக சோர்வடையத் தொடங்கி, படிப்படியாக பல நோய்களை உண்டுபண்ணும்.

நாம் உண்ணும் உணவானது வயிற்றில் சரியான முறையில் ஜீரணமானால்தான் எந்த பிரச்சினையும் இருக்காது. வேகமாக சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் சிலருக்கு வயிற்று உப்புசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே செரிமானம் சீராக நடைபெற சில உணவுப் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. அவற்றை பார்ப்போம்,

அவசரமாக, வேகமாக சாப்பிடும்போது உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாமல் போகும். அது நல்லதல்ல. மெதுவாக சாப்பிடுவதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும் முடியும். எனவே அவசரமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உணவை மென்று சாப்பிடாவிட்டால் செரிமானம் கடினமாகும். செரிமானத்தின் முதல் கட்டம் வாயிலேயே தொடங்குகிறது. உணவை நன்றாக மென்று சிறிய துண்டுகளாக மாற்றுவது விழுங்குவதையும், அடுத்தகட்ட செரிமானத்தையும் எளிதாக்கும்.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மொபைல் போனோ, டி.வி.யோ பார்த்தால் கவனச்சிதறல் உண்டாகும். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை உணராமல் அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு உண்டாகக்கூடும்.

பசியில்லாத நிலையிலும் தொடர்ந்து சாப்பிடுவது வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும், அசவுகரியம் உண்டாக்கும். சிலருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தலாம். எனவே பசி மற்றும் வயிறு நிறைந்த உணர்வை கவனத்தில் கொண்டு உண்பது நல்லது.

அதிக கொழுப்புள்ள அல்லது எண்ணெய்யில் வறுத்த உணவுகள் சிலருக்கு வயிற்று பாரம், உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே இவற்றை அடிக்கடி அதிக அளவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்பானங்கள் மற்றும் பிற சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை உணவுடன் அடிக்கடி குடிப்பது தேவையற்ற சர்க்கரை உட்கொள்ளலுக்கு வழிவகுக்கக்கூடும். கலோரிகளையும் அதிகரிக்கச் செய்யும். தண்ணீர் அல்லது சர்க்கரை சேர்க்காத பானங்கள் பருகுவது சிறந்த தேர்வாக அமையும்.

உணவு உட்கொள்ளும்போது அவசியம் ஏற்பட்டால் பேசுவது தவறல்ல. ஆனால் பேசிக்கொண்டே வேகமாக சாப்பிடுவது, உணவை நன்றாக மென்று சாப்பிடும் பழக்கத்திற்கு இடையூறாக அமையும். எனவே மெதுவாக உண்பது முக்கியமானது.

கார உணவு அனைவருக்கும் பிரச்சினை ஏற்படுத்தாது. ஆனால் உணவில் அதிக காரம் சேர்ந்தால் சிலருக்கு நெஞ்செரிச்சல், அசிடிட்டி அல்லது வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பிட்ட உணவு தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தினால் அதனை உட்கொள்ளும் அளவை குறைத்துக்கொள்வது நல்லது.

மன அழுத்தத்திலோ அல்லது கோபத்திலோ இருக்கும்போது சிலர் வேகமாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடலாம். அமைதியான சூழலில் மெதுவாக உண்பது, உணவு மீது கவனம் செலுத்த உதவும். சாப்பிடும் அளவையும் குறைக்க வித்திடும்.

சாப்பிட்ட உடனேயே கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது சிலருக்கு வயிற்று அசவுகரியம் அல்லது வாந்தி உணர்வை ஏற்படுத்தலாம். எனவே சாப்பிட்டபிறகு உடற்பயிற்சி செய்வதற்கு இடைவெளி கொடுப்பது நல்லது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *