இலங்கை

ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணி ஆக்கிரமிப்பு முயற்சி?; கஜேந்திரகுமார் கள ஆய்வு

வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அரசங்குளத்தில் பொலிஸ் நிலையத்தின் பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் காணியும் கட்டிடங்களும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், பொலிஸார் அங்கு செல்லாமல் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

தற்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணியிலேயே பொலிஸ் நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மேலதிக காணியையும் ஆக்கிரமித்தால், ஓமந்தை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் வி. சஞ்சுதன், பிரதேச சபை உறுப்பினர் க. பிரதீபன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். தவபாலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் புத்தர் சிலை அமைக்கும் முயற்சிக்கு எதிராக உடனடி சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button