அமெரிக்க வீரரை பிடித்துக் கொடுத்தால் ரூ.28 இலட்சம் ; ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து ஒப்படைத்தாலோ 30,000 அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தொகை சுமார் 28 இலட்சம் இலங்கை ரூபாய்க்கு சமமானதாகும். பெண் ஒருவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டால் சன்மானத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹதாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சன்மானத் திட்டம் குறித்து அமீர் ஹதாமி, அமெரிக்காவுக்கு எதிரான மோதலில் பங்களிக்க விருப்பம் தெரிவித்து பெருமளவானோர் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் தொடர்கிறது.
இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஈரானுக்குள் அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளனவா என்பது தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி வருகின்றன.
முன்னதாக அமெரிக்க வீரர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய பல தகவல்கள் நம்பகமான ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை என உண்மைச் சரிபார்ப்பு நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
தற்போது ஈரான் ராணுவம் அறிவித்துள்ள சன்மானத் திட்டம், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலின் தீவிரத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
![]()