முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசு உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்!

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில அரச உத்தியோகத்தர்கள் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் இம்ரான் மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு சமூகத்தினரதும் சமய மற்றும் கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பை பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்படும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நடைமுறைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில அரச உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் எனவும், இது அரசாங்கத்தின் ‘வளமான நாடு’ கொள்கையை கேள்விக்குள்ளாக்கும் எனவும் இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அடிக்கடி இடம்பெறும் தேவையற்ற தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
![]()