உலகம்

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

அரசு வெளியிட்ட அண்மைய தகவலின்படி, சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் மேலும் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அசாமில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்தது.

அதேவேளையில், அசாமின் ஏழு மாவட்டங்களில் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிவசாகரில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் எனப் புதிதாக மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் வெள்ளம் தொடர்பான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களான சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் பெருநகரம் ஆகியவற்றில் மொத்தம் 3,00,031 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 வருவாய் வட்டங்கள் மற்றும் 551 கிராமங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், 21,523.08 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளபடி, 16,500-க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் 71 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதேவேளையில், மேலும் 72,000-க்கும் மேற்பட்டோருக்கு 30 நிவாரண விநியோக மையங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவக் குழுக்களுடன் பல்வேறு மீட்புப் பணிக் குழுக்களும் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

வெள்ளப்பெருக்கு, கரைகள், சாலைகள், வீடுகள், பாடசாலைகள் மற்றும் பிற பொதுச் சொத்துகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

11,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ASDMA தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button