முச்சந்தி

அடக்கம் செய்யப்பட்ட சடலத்தைத் தோண்டி சடலத்தை வீசிவிட்டு பிரேதப் பெட்டி திருட்டு; யாழ். கொட்டடி சேமக்காலையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – கொட்டடியில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட சடலத்தைத் தோண்டி பிரேதப் பெட்டியைத் திருடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கொட்டடி சேமக்காலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடலமொன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளை நிறைவு செய்துவிட்டு குடும்பத்தினரும் உறவினர்களும் சென்றபின்னர் விஷமிகள் சிலர் சடலத்தைத் தோண்டியெடுத்து பிரேதப்பெட்டியை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சேமக்காலையில் இருந்து துர்நாற்றம் வருவதாக யாழ்ப்பாணம் மாநகரசபையின் சுகாதாரக் குழுத் தலைவர் சாரூபனுக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற யாழ் மாநகர சபையினர் இதனைக் கண்டுள்ளனர்.

அந்தச் சடலம் விலங்குகளால் தீண்டப்பட்டு சிதிலமடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து, அந்தச் சடலத்தை உரிய கண்ணியத்துடன் மீள அடக்கம் செய்வதற்கு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சேமக்காலைகளில் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. சேமக்காலைகளில் அஞ்சலிக்காக வைக்கப்படும் மலர் வளையங்கள் உடனடியாகவே மர்மக் குழுக்களால் திருடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button