முச்சந்தி

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கத் தலைவர் தவசிதேவர் ஐயாத்துரை காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி, ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான தவசிதேவர் ஐயாத்துரை  காலமானார்.

‘மாத்தளை ரோகிணி’ என்ற புனைப்பெயரில் இலக்கிய உலகில் அறியப்பட்ட அவர், கம்பளை புசத்தன தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

தோட்டத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அவர், பின்னர் மலையக மக்களின் உரிமைக்காக போராடிய முக்கிய தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார்.

ஆரம்பத்தில் திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதன் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஐயாத்துரை, பின்னர் மறைந்த வி.கே. வெள்ளையுடன் இணைந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இலங்கைஏற்றுமதி தயாரிப்புகள்

வி.கே. வெள்ளையின் மறைவுக்குப் பின்னர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையை அவர் ஏற்றார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொள்கையின்படி, தோட்டத் தொழிலாளி ஒருவரே சங்கத்தின் தலைவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1971ஆம் ஆண்டு அவர் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இலக்கியத் துறையிலும் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய அவர், ‘உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’ (1993) என்ற நூலை வெளியிட்டதுடன், ‘பூங்கோதை புயலானாள்’, ‘வந்த துன்பம் போதும்’, ‘அவனுக்கு அவள் துணை’ உள்ளிட்ட தொடர் கதைகளையும் எழுதியுள்ளார். மேலும், 1997ஆம் ஆண்டு ‘இதயத்தில் இணைந்த இரு மலர்கள்’ என்ற நாவலையும் வெளியிட்டார்.

அரசியல் வாழ்விலும் செயற்பட்ட அவர், 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்வானார்.

இதற்கு முன்னர், 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா–மஸ்கெலியா மூன்று உறுப்பினர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்றதும் அவரது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

தொழிற்சங்கப் போராட்டம், அரசியல் மற்றும் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளிலும் கொள்கைப் பிடிப்புடன் செயற்பட்ட தவசிதேவர் ஐயாத்துரையின் மறைவு, மலையக சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button