முச்சந்தி

தமிழ் யுவதி உட்பட ஐவரை காவுகொண்ட தீ; உடல்களை தோடு, கழுத்து மாலை மூலம் அடையாளம் கண்ட உறவுகள்

ஹோமாகம – கடுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், தமிழ் யுவதி ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்விபத்தில் தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 24 வயதுடைய கொதாகொட சிதுகே சஹன் உதார , ஹட்டன் மஸ்கெலியா குயின்டஸ் பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய வரதராஜ் தமயந்தி, கொட்டாவ பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 52 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாய கொலவென்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய வதுகல கமகே திலீப் மதுசங்க மற்றும் அடகலம்பன்னவைச் சேர்ந்த 24 வயதுடைய சசின் தில்ஷான் ஆகிய ஐவரே உயிரிழந்துள்ளனர்.

மேலும், தீ விபத்தின் போது நச்சுப் புகையை சுவாசித்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தொழிற்சாலையின் உட்பகுதியை குளிர்விக்க பயன்படுத்தப்பட்ட மின்விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் காரணமாக தீ வேகமாக பரவியதுடன், அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோட்டை, தெஹிவளை, ஹொரானா தீயணைப்பு பிரிவுகள் மற்றும் விமானப்படையின் ஆறு தீயணைப்பு வாகனங்கள் இணைந்து பல மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

இதற்கிடையில், தீக்காயங்களால் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த சடலங்களை அடையாளம் காண DNA பரிசோதனை மேற்கொள்ள ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அனுமதி வழங்கினார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சில உடல்களை, உயிரிழந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்கள் அணிந்திருந்த இடுப்புப் பட்டை, தோடு மற்றும் கழுத்து மாலை போன்ற அடையாளங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த தொழிற்சாலை 2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்கவில்லை எனவும், கழிவு அகற்றல், சத்தம் மற்றும் காற்றின் தரம் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அவசரகால நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையிலான திட்டம் தொழிற்சாலையில் காணப்படவில்லை என்றும், இதுகுறித்து ஜூலை 2 ஆம் திகதி நினைவூட்டல் அனுப்பப்பட்டிருந்த போதிலும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஹோமாகம பகுதியில் தனியான தீயணைப்பு பிரிவு இல்லாதமை தொடர்பில் சம்பவ இடத்தை பார்வையிட்ட பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், தொழிற்சாலையின் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button