இலங்கையிலிருந்து விடை பெறும் சீனத் தூதுவர்

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பதாகவும், அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நாளுக்கு நாள் அபிவிருத்தியை நோக்கிப் பயணிப்பதாகவும், இலங்கையிலிருந்து விடைபெறவிருக்கும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் இந்த அபிவிருத்திப் பயணத்திற்குத் தொடர்ந்தும் அனைத்து வழிகளிலும் சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இங்கு ஆறு வருட கால சேவையை நிறைவு செய்து இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து விடைபெறவிருக்கும் சீனத் தூதுவர், கடந்த 17 ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்திருந்த போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
கண்டிக்கு விஜயம் செய்த அவர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளுக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இதன்போது, கடந்த ஆறு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த அவர் ஆற்றிய சேவையை மகாநாயக்க தேரர்கள் பாராட்டினர்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவிக்கையில்,
“பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு வழங்கிய உதவிகள் உள்ளிட்ட பல பணிகளைத் தூதுவர் முன்னின்று மேற்கொண்டார். தனது கடமைகளை பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றியதாலேயே, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவர் இலங்கையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர், “இலங்கையை எனது இரண்டாவது வீடாகவே கருதுகிறேன். விடைபெறும் இந்தத் தருணத்தில், மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்ற உணர்வு மேலோங்குகிறது. தாம் தூதுவராக இருந்த காலப்பகுதியில் இலங்கை பல நெருக்கடிகளைச் சந்தித்த போதும், சீனா எப்போதும் இலங்கைக்குத் துணையாக நின்று உதவியது. பௌத்த மதத்தைப் பின்பற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு சிதைவடைய எந்தக் காரணமும் இல்லை,” என்று வலியுறுத்தினார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க அதிபூஜ்ய வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன மகாநாயக்க தேரரைச் சந்தித்த தூதுவர், மகா விகாரைகளுடன் சிறந்த உறவைப் பேணி, தேசிய மற்றும் மத ரீதியாக தான் ஆற்றிய சேவைகளுக்காகத் தேரரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.
![]()