இலங்கை

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் சாதாரணமாகிவிட்டது; மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்

பிரபல விசாரணைகளின் சாட்சியாளர்களாக இருந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பது இப்போது சாதாரண விடயமாகிவிட்டது. அந்த வகையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவின் மர்ம மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை பொதுஜன பெரமுனவினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மனோஜ் கமகே மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்கிரமரத்னவின் மரணமானது பிரச்சினைக்குரியதாக உள்ளது. பொதுவாக எவராவது உயிரிழந்தால் அது இயற்கையாக நடந்தா? தற்கொலையா? அல்லது கொலையா? என்று மரண விசாரணைகளின் மூலமே அறிவிக்கப்படும். கடந்த காலங்களில் கவில சந்திரசேன, திறைசேரி உதவிப் பணிப்பாளரின் மரணங்கள் மற்றும் தற்போது நடந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் ஆகியன நடந்த உடனேயே உடல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அது தற்கொலை என்று சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கூறப்படுகின்றன. இது எம்மிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

சம்பவம் நடந்த உடனேயே மரண விசாரணைக்கு முன்னரே இது தற்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு வருவதானது பெரும் பிரச்சினைக்குரியதாகும். இது ஆபத்தானதும் கூட, இப்போது முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் நாங்கள் அதிர்ச்சியடைகின்றோம். நாடு நெருக்கடிக்குள் சிக்கியிருந்த காலத்தில் எந்தவொரு சவாலுக்கும் முகம்கொடுத்து செயற்பட்டவர். இவர் எவரையும் பழிவாங்கும் வகையில் செயற்படுபவர் அல்ல. இவ்வாறானவரின் மரணம் தொடர்பில் நாங்கள் எமது கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் பிரபல விசாரணைகளின் சாட்சியாளர்களாக இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினராக இருந்தவர்கள், பிரதிவாதிகள் உயிரிழப்பது இப்போது சாதாரண விடயமாகியுள்ளது. மக்களுக்கு தமது உயிர்கள் இழக்கப்படுவது தொடர்பில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலவேளை சிறிது காலத்தில் நான் மனோஜ்கமகே தற்கொலை செய்துகொண்டேன் என்று செய்தி வருமோ தெரியவில்லை. இதற்கு முன்னர் நந்தன குணதிலக்கவும் முக்கிய விடயங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கையில் இறந்துள்ளார். இதிலும் பிரச்சினைகள் உள்ளன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button