முச்சந்தி
உலக கோப்பை விதிகள் காற்றில் பறந்தன: விளையாட்டிலும் டொனால்ட் டிரம்பின் தலையீடு?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகக் கால்பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது உலக அரசியல், பொருளாதாரம், தேசிய அடையாளம் மற்றும் சர்வதேச செல்வாக்கு ஆகிய அனைத்தும் ஒன்றாகச் சந்திக்கும் மிகப்பெரிய மேடையாகும். அதனால்தான் FIFA உலகக் கோப்பை போட்டிகளில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில், 2026 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணியின் முன்னணி வீரரான போலரின் பலோகுன் (Folarin Balogun) மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு போட்டித் தடையை FIFA திடீரென ரத்து செய்திருப்பது, உலக விளையாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த முடிவின் பின்னணியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய அரசியல் தலைவருமான டொனால்ட் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டதாக வெளியான தகவல்கள், விளையாட்டுத் துறையின் சுயாதீனம் குறித்த மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. விளையாட்டில் அரசியல் அதிகாரம் எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்த முடியும் என்ற விவாதமும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சர்ச்சையின் தொடக்கம்:
அமெரிக்கா மற்றும் போஸ்னியா அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கோப்பை நாக்அவுட் சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி தாக்குதல் வீரரான போலரின் பலோகுன் (Folarin Balogun) , எதிரணி வீரர் தாரிக் முஹரேமோவிக் (Tarik Muharemovic) மீது காலால் மிதித்ததாக நடுவர் தீர்மானித்தார். VAR தொழில்நுட்பத்தின் உதவியுடன் சம்பவம் மீளாய்வு செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நேரடி சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
கால்பந்தின் ஒழுங்குமுறைப்படி, நேரடி சிவப்பு அட்டை பெற்ற வீரர் அடுத்த போட்டியில் தானாகவே விளையாடத் தகுதியிழப்பார். இது FIFA மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள அடிப்படை விதியாகும். எனவே பெல்ஜியத்திற்கு எதிரான மிக முக்கியமான பதினாறு அணிகள் சுற்றுப் போட்டியில் பலோகுன் விளையாட முடியாது என்பது அனைவரும் எதிர்பார்த்த நிலையாக இருந்தது. ஆனால் சில நாட்களுக்குள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
டிரம்பின் தலையீடும் குற்றச்சாட்டும்:
FIFA தலைவர் ஜீயானி ( Gianni Infantino) வுடன் டொனால்ட் டிரம்ப் கொண்டிருக்கும் நெருங்கிய உறவைப் பயன்படுத்தி, போலரமீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு டிரம்ப் நேரடியாக அழுத்தம் கொடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பின்னர் FIFA ஒழுங்குமுறைக் குழு தனது தீர்ப்பை மாற்றியது. முழுமையான ஒரு போட்டித் தடையாக இருந்த தண்டனை, ஒரு ஆண்டு கால நிபந்தனைக்குட்பட்ட இடைநீக்கம் என்ற வகையில் மாற்றப்பட்டது. இதன் விளைவாக பலோகுன் பெல்ஜியத்திற்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் விளையாட அனுமதிக்கப்பட்டார். இது சாதாரண ஒழுங்கு நடவடிக்கை மாற்றமல்ல. FIFA தனது சொந்த ஒழுங்குமுறையை மாற்றியிருக்கிறதா என்ற கேள்வியே உலகம் முழுவதும் எழுந்தது.
FIFA முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில், ஒரு பெரிய அநீதியைச் சரிசெய்த FIFA-விற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டார். இந்தப் பதிவு, தன்னுடைய தலையீட்டை மறைமுகமாக உறுதிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறினர். பல அரசியல் விமர்சகர்கள், ஒரு சுயாதீன விளையாட்டு அமைப்பின் தீர்ப்பில் அரசியல் தலைவர் ஒருவர் செல்வாக்கு செலுத்தியிருக்கிறார் என்ற எண்ணமே மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டனர்.

பெல்ஜியத்தின் கடும் எதிர்ப்பு
இந்த முடிவுக்கு மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றியது பெல்ஜிய கால்பந்துச் சங்கமாகும். ஒரே விதி அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு உலகக் கோப்பையில் சிலருக்கு ஒரு விதியும் மற்றவர்களுக்கு வேறு விதியும் இருந்தால், போட்டியின் நம்பகத்தன்மையே சிதைந்துவிடும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த முடிவை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது பற்றியும் ஆலோசனைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
பெல்ஜிய அணியின் பயிற்சியாளர் ரூடி (Rudi Garcia) தனது ஏமாற்றத்தை நகைச்சுவை கலந்த விமர்சனமாக வெளிப்படுத்தினார். ஜூலை 5-ஆம் தேதி FIFA-விற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி போலத் தோன்றுகிறது என்பது எனக்குத் தெரியவில்லை என்ற அவரது கருத்து உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறியது.
அவரது இந்தக் கருத்து, FIFA எடுத்த முடிவு விளையாட்டு நியாயத்திற்கு எதிரானது என்ற உணர்வை வெளிப்படுத்தியது.
பெல்ஜிய அணியின் அனுபவமிக்க பந்துக் காப்பாளர் தியாபட் ( Thibaut Courtois) , இந்த முடிவு ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றியது அல்ல என்று குறிப்பிட்டார்.
இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணம். இன்று ஒரு வீரருக்காக விதி மாற்றப்பட்டால், நாளை வேறு யாருக்காக மாற்றப்படாது என்று யார் உறுதி தர முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கருத்து உலக விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தைக் குறித்த ஆழமான கவலையையும் பிரதிபலிக்கிறது.
பெல்ஜிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜுக்குலின் (Jacqueline Galant) விதிகளை மதித்து வெல்வதே உண்மையான வெற்றி என்று தெரிவித்தார். அதேவேளை, பெல்ஜிய எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்னும் கடுமையான மொழியில் விமர்சித்தனர். பணம், அதிகாரம் மற்றும் அரசியல் ஆகியவை விதிகளை நிர்ணயிக்கத் தொடங்கினால், உலகக் கோப்பையின் மதிப்பு அழிந்து விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம், அமெரிக்க அணியின் பயிற்சியாளர் மாரிசியோ (Mauricio Pochettino) FIFA எடுத்த முடிவை வரவேற்றார். அவரின் கருத்துப்படி, பலோகுனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டையே ஆரம்பத்தில் தவறானது. எனவே அந்தத் தவறை FIFA தற்போது திருத்தியுள்ளது என்றார். நாங்கள் வில்லன்களும் அல்ல, பலிகடாக்களும் அல்ல. ஆரம்பத்தில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Marco Rubio கூட முன்னதாகவே சிவப்பு அட்டை அநியாயமானது என்று கூறியிருந்தது, இந்த விவகாரம் விளையாட்டைத் தாண்டி அரசியல் விவாதமாக மாறியிருப்பதைக் காட்டுகிறது.விளையாட்டில் அரசியல் தலையீடு:
விளையாட்டின் மிகப்பெரிய பலம் அதன் நடுநிலைத்தன்மை. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் சக்தியைக் கொண்டவராக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் பொருந்த வேண்டும் என்பதே அதன் அடிப்படை. அந்தக் கொள்கையே உலக விளையாட்டின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குகிறது.
ஆனால் ஒரு சக்திவாய்ந்த அரசியல் தலைவர் நேரடியாகத் தலையிட்டு ஒரு ஒழுங்கு நடவடிக்கையை மாற்ற முடியும் என்ற எண்ணம் உருவாகும்போது, அந்த நம்பிக்கையே சிதையத் தொடங்கும். FIFA பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாகத் தெளிவின்மை, அரசியல் செல்வாக்கு போன்ற பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. இந்த புதிய சர்ச்சை அந்த விமர்சனங்களை மேலும் வலுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
FIFA நம்பகத்தன்மைக்கு சவால்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பாக FIFA தன்னை அரசியலிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய கடமை கொண்டுள்ளது. விதிகள் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்ற நம்பிக்கையே உலகக் கோப்பையின் அடித்தளம். ஒரு வீரருக்காக விதி மாற்றப்பட்டதாக உலகம் நம்பத் தொடங்கினால், எதிர்காலத்தில் நடுவர்களின் தீர்ப்புகள் முதல் ஒழுங்கு நடவடிக்கைகள் வரை அனைத்தும் சந்தேகத்திற்கு உள்ளாகும். இது ஒரு தனிப்பட்ட போட்டியைத் தாண்டி, FIFA நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையே சோதனைக்கு உட்படுத்தும் பிரச்சினையாக மாறியுள்ளது.

பலோகுன் தொடர்பான இந்த விவகாரம், ஒரு வீரரின் தடை நீக்கப்பட்ட சம்பவம் மட்டுமல்ல. விளையாட்டு நிர்வாகத்தின் சுயாதீனம், அரசியல் அதிகாரத்தின் செல்வாக்கு, விதிகளின் சமத்துவம் மற்றும் உலக விளையாட்டின் நம்பகத்தன்மை ஆகிய அடிப்படைக் கொள்கைகள் அனைத்தும் இந்தச் சர்ச்சையின் மையத்தில் உள்ளன. உதைபந்து விளையாட்டின் உண்மையான அழகு, திறமை மற்றும் விதிகளை மதிக்கும் பண்பில்தான் உள்ளது. அந்த விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பொருந்தும் போது மட்டுமே உலகக் கோப்பை போன்ற போட்டிகள் தங்களது கண்ணியத்தையும் மதிப்பையும் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இந்தச் சம்பவம் உண்மையில் உலக விளையாட்டு நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. FIFA தனது முடிவுகள் வெளிப்படையானவையும், அரசியல் செல்வாக்கிலிருந்து விடுபட்டவையும் என்பதை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில், உலகக் கோப்பை வெறும் விளையாட்டுப் போட்டியாக அல்லாமல், அதிகாரமும் அரசியலும் மோதும் மேடையாக மாறிவிடும் என்ற அச்சம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
![]()