புலிகளை அழித்து ஒற்றையாட்சியை பாதுகாத்த இராணுவத்தினருக்கு எதிராக இன்று பழிவாங்கல்; எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

உலகின் மிகக் கொடூரமான விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்து, நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்த இராணுவ உயர் அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். சகல தரப்பினரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் பேசுகையில்,
பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. ஒட்டுமொத்த பொருளாதார சுமையும் நாட்டு மக்கள் மீதே திணிக்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தை தவிர்த்து பொருளாதார மீட்சிக்கு எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது.
நாட்டில் பலவீனமான நிர்வாக கட்டமைப்பினால் சகல தரப்பிலும் அரசியல் அழுத்தம் தீவிரமடைந்துள்ளதை காண முடிகிறது.நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் இதற்கு சிறந்த உதாரணமாகும். பொறுப்பினை ஏற்று
நீதியமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகின்ற நிலையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்தி ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள்.
உலகின் மிகக் கொடூரமான விடுதலைப் புலிகள் அமைப்பை முழுமையாக அழித்து, நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாத்த இராணுவ அதிகாரிகள் இன்று அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட இராணுவ உயர் அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால் அனைவரும் இதற்கு எதிராக ஒன்றுப்பட வேண்டும். சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
![]()